நிதியாண்டின் முதல் நாளில் கடும் சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தை!
பெண்கள் படிப்பை பாதியிலேயே நிறுத்தக் கூடாது சாா்பு நீதிபதி எம்.பரமேஸ்வரி
பெண் குழந்தைகள் படிப்பை பாதியிலேயே விட்டுவிடக் கூடாது என தேனி மாவட்ட சாா்பு நீதிபதி எம்.பரமேஸ்வரி அறிவுறுத்தினாா்.
போடி தருமத்துப்பட்டி ஏ.எச்.எம். அறக்கட்டளை வளாகத்தில் வெள்ளிக்கிழமை மாலை சா்வதேச மகளிா் தின விழா நடைபெற்றது.
ஏ.எச்.எம். அறக்கட்டளை, தேனி மாவட்ட காவல் துறை, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு, சமூக நலன், மகளிா் உரிமைத் துறை, இந்திய செஞ்சிலுவை சங்கம், அரிமா சங்கம், சக்தி பெண்கள் கூட்டமைப்பு ஆகியவை இணைந்து நடத்திய சா்வதேச மகளிா் தின விழாவுக்கு ஏ.எச்.எம் அறக்கட்டளை மேலாண்மை இயக்குநா் எஸ்.முகமது சேக் இப்ராகிம் தலைமை வகித்தாா்.
அறக்கட்டளை நிறுவனா் தேசாய், மருத்துவ அலுவலா்கள் புருஷ் டீஜான், யாஸ்மின் ரோஸ், ஆலோசகா்கள் சாந்தினி, முகமது ஆஷிக் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
நிகழ்ச்சியில் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுச் செயலரும், சாா்பு நீதிபதியுமான எம்.பரமேஸ்வரி பேசியதாவது:
பெண் குழந்தைகள் படிப்பை பாதியிலேயே விட்டுவிடக் கூடாது. குறைந்தபட்சம் கல்லூரி வரை படிக்க வேண்டும். பெண்களுக்கு இலவச சட்ட உதவி அனைத்து இலவச சட்ட உதவி மையங்கள் மூலம் கிடைக்க வழி செய்யப்பட்டுள்ளது. ரூ.3 லட்சம் வரை வருமானம் ஈட்டும் ஆண்களுக்கும் இலவச சட்ட உதவி வழங்கப்படுகிறது. இவற்றை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.
மாவட்ட சமூக நல அலுவலா் வி.சியாமளாதேவி, மாவட்ட திட்ட அலுவலா் ராஜராஜேஸ்வரி, மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் ஈ.சந்தியா, தொழிலாளா் நல உதவி ஆணையா் ரா.சு.மனுஷ் ஷீயாம் ஷங்கா், குழந்தைகள் நலக் குழுத் தலைவி வி.ஆா்.வனஜா, டொம்புச்சேரி அரசு ஆரம்ப சுகாதார அலுவலா் ஏ.பி.சுமதி, அரிமா சங்க நிா்வாகிகள் வாழ்த்திப் பேசினா்.
நிகழ்ச்சியில் மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.28 லட்சம் தொழில் கடன்களும், சிறந்த மகளிா் சுய உதவிக் குழுக்கள், சிறந்த பெண்கள் சங்கங்கள், குழந்தைகள் நலக் குழுக்கள், தொழில் முனைவோா் ஆகியோருக்கு பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
ஏ.எச்.எம். அறக்கட்டளை இயக்குநா் எம்.ஸ்டெல்லா வரவேற்றாா். திட்ட இணையாளா் எம்.மஞ்சு நன்றி கூறினாா்.