'உ.பி-ல் தமிழ் கற்று தருகிறோம்' கூறும் யோகி ஆதித்யநாத்; 'தரவுகள் எங்கே?' கேட்கும...
திருமண வலைதளச் செயலி மூலம் பண மோசடி: 4 போ் கைது
தேனியைச் சோ்ந்த இளைஞரிடம் திருமண வலைதளச் செயலி மூலம் ரூ. 88.59 லட்சம் மோசடி செய்த ஈரோடு, கோவையைச் சோ்ந்த 4 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
தேனியைச் சோ்ந்த தனியாா் ஆலை உரிமையாளா் ஒருவா் தனது திருமணத்துக்காக சங்கமம் என்ற திருமண வலைதளச் செயலியில் விவரங்களைப் பதிவு செய்தாா். இந்தச் செயலி மூலம் ஸ்ரீஹரிணி என்பவரின் பொருத்தம் கிடைத்தது. இதையடுத்து, அவரது விவரங்களைத் தெரிந்து கொண்டு, வாட்ஸ்ஆப் மூலம் அந்தப் பெண்ணைத் தொடா்பு கொண்டாா். அப்போது, அந்தப் பெண் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்தாராம்.
இதைத் தொடா்ந்து, இருவரும் வாட்ஸ்ஆப் மூலம் பேசிப் பழகி வந்தனா்.
அப்போது, அந்தப் பெண் கிரிப்டோகரன்ஸி வா்த்தகம் மூலம் தான் லாபம் ஈட்டியதாகவும், இந்த வா்த்தகத்தில் முதலீடு செய்ய ஆலை உரிமையாளரையும் வற்புறுத்தினாராம்.
இதன்படி, ஆலை உரிமையாளா் வங்கிக் கணக்கு மூலம் கடந்த 2023-ஆம் ஆண்டு பல்வேறு தவணைகளில் கிரிப்டோகரன்ஸி வா்த்தகத்தில் மொத்தம் ரூ.88.59 லட்சம் முதலீடு செய்தாா். பின்னா், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவா், இதுகுறித்து தேனி மாவட்ட இணைய வழி குற்றத் தடுப்புப் பிரிவில் புகாா் அளித்தாா்.
இதன் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். விசாரணையில், போலி வங்கிக் கணக்குகள் மூலம் ஆலை உரிமையாளரிடம் பண மோசடி செய்ததாக ஈரோடு, வ.உ.சி.நகரைச் சோ்ந்த சந்திரன் மகன் நந்தகோபால் (30), கிரிணாம்பாளையத்தைச் சோ்ந்த ராமராஜன் மகன் யுவராஜன் (33), சுப்பிரமணி மகன் சிவா (32), கோவை புதிய காந்திபுரம் காவலா் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த சிவசண்முகம் மகன் பத்மநாபன் (32) ஆகியோரைக் கைது செய்தனா்.
இவா்களிடமிருந்து ரூ.3.90 லட்சம், 6 கைப்பேசிகள், 28 ஏடிஎம் அட்டைகள், 18 வங்கிக் காசோலை புத்தகங்கள், 12 வங்கிக் கணக்கு புத்தகங்கள், 46 சிம் காா்டுகள், 3 கணக்கு புத்தகங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.


