கடலூர் பள்ளி வேன் விபத்து: ``சுரங்கப்பாதை அமைக்க ஓராண்டாக கலெக்டர் அனுமதி தராததே...
போதைப்பொருள் வழக்கில் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு ஜாமீன் - நீதிமன்றம் விதித்த நிபந்தனை என்ன?
தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் ஸ்ரீகாந்த், போதைப்பொருள் வைத்திருந்ததாக கடந்த ஜூன் 23-ம் தேதி சென்னை நுங்கம்பாக்கம் போலீஸார் அவரைக் கைது செய்தனர். தொடர்ந்து நடிகர் கிருஷ்ணா இதே வழக்கில் கைது செய்யப்பட்டார்.
முன்னதாக இந்த வழக்கில் அதிமுக நிர்வாகி பிரசாத் மற்றும் பெங்களூருவைச் சேர்ந்த பிரதீப், கெவின் ஆகியோரும் கைது செய்யப்பட்டிருந்தனர்.

புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா சென்னை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்தனர். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி நிர்மல் குமார் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
நடிகர் கிருஷ்ணா தரப்பில், மருத்துவ சோதனையில் போதைப்பொருள் பயன்படுத்தியது நிறுவப்படவில்லை என வாதாடப்பட்டது. ஸ்ரீகாந்த் தரப்பில், அவர் குழந்தையுடன் விளையாடிக்கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டதாகவும் வாதிடப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி இன்று (08.07.2025) தீர்ப்பு வழங்குவதாக அறிவித்திருந்தார். இந்த நிலையில் அவர்களுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ரூ.10,000 மதிப்பிலான சொந்த ஜாமீனிலும் அதே தொகைக்கான இருநபர் ஜாமீனிலும் இருவருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
மறு உத்தரவு வரும்வரை தினமும் புலன்விசாரணை அதிகாரி முன்பு கையெழுத்திட வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.