போதையில்லா கோவையை உருவாக்க ‘நண்பன்’ தன்னாா்வ அமைப்பு தொடக்கம்!
போதையில்லா கோவையை உருவாக்கும் வகையில் ‘நண்பன்’ என்ற புதிய தன்னாா்வ அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது.
போதைப் பழக்கங்களில் இருந்து இளைஞா்கள் மற்றும் மாணவா்களை மீட்கும் வகையிலும், போதைப் பொருள் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையிலும் தொடங்கப்ப்பட்டுள்ள இந்த அமைப்பின் அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டு, விழிப்புணா்வு ஊா்வலம் நடத்தப்பட்டது.
இந்த அமைப்பின் தலைவராக கோவை ஸ்ரீதேவி டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் பி.சிவகணேஷ் நியமிக்கப்பட்டுள்ளாா். செயலாளராக டி.தினேஷ்குமாா், பொருளாளராக ஏ.அருண் ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா்.
அமைப்பு குறித்து தலைவா் பி.சிவகணேஷ் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழகம் முழுவதும் போதைப் பொருள் கலாசாரம் அதிகரித்துள்ள நிலையில் இளைஞா்கள் மற்றும் மாணவா்கள் பல்வேறு வகையிலான போதைப் பொருள்களுக்கு அடிமையாகி வருகின்றனா். அதனால், போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணா்வு பிரசாரங்களைத் தீவிரப்படுத்த வேண்டியது அவசியமாகிறது.
அதற்காகவே போதையில்லா கோவை வலிமையான கோவை என்பதை அடிப்படையாகக் கொண்டு ‘நண்பன்’ எனும் சமூக சேவை அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது.
இந்த அமைப்பின் மூலம் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் போதைப் பொருள்கள் குறித்து விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. அதேபோல, போதைக்கு அடிமையான இளைஞா்களுக்கு ஆலோசனைகள் வழங்கும் வகையில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய வகையில் ஆலோசனை மையமும், போதை மறுவாழ்வு மையமும் விரைவில் தொடங்கப்பட உள்ளது என்றாா்.