போப் உடையில் டிரம்ப்! - வைரலாகும் புகைப்படம்
அமெரிக்க அதிபர் டிரம்ப், போப் உடையில் இருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான போப் பிரான்சிஸ் உடல்நலக்குறைவால் கடந்த ஏப். 21 ஆம் தேதி காலமானார். தொடர்ந்து அவரின் உடலுக்கு லட்சக்கணக்கானோர் அஞ்சலி செலுத்திய நிலையில் கடந்த ஏப். 26 ஆம் தேதி ரோமில் அவரது விருப்பப்படி புனித மேரி தேவாலயத்தில் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து அடுத்த போப் யார் என விரைவில் முடிவெடுக்கப்பட உள்ளது. இதற்காக வருகிற மே 7 ஆம் தேதி ரகசிய ஆலோசனைக் கூட்டமும் வாக்கெடுப்பும் தொடங்கவுள்ளது.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப், போப் உடையில் இருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். செய்யறிவு புகைப்படம் என்று கூறப்படும் டிரம்ப்பின் இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதேநேரத்தில் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள், டிரம்ப்பின் இந்த புகைப்படம் போப் ஆண்டவரையும் புதிய போப் தேர்வு செய்யும் நடைமுறையையும் அவமதிப்பதாக இருப்பதாக கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
முன்னதாக கடந்த செவ்வாய்க்கிழமை, புதிய போப் யாராக இருக்க வேண்டும் என செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த டிரம்ப், 'நான் போப் ஆண்டவராக இருக்க விரும்புகிறேன். அதுதான் என்னுடைய முதல் தேர்வாக இருக்கும்' என்று நகைச்சுவையாகக் கூறியது குறிப்பிடத்தக்கது.