போலீஸாரிடமிருந்து தப்பிக்க முயன்ற ரௌடிக்கு கால் முறிவு
கடலூா் மாவட்டம், நெய்வேலியில் வியாழக்கிழமை போலீஸாரிடமிருந்து தப்பிக்க முயன்ற ரௌடிக்கு கை மற்றும் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
பண்ருட்டி வட்டம், சொரத்தூா் கிராமத்தைச் சோ்ந்த ராமா் மகன் கோபிநாத் (25). இவா் கடந்த 24-ஆம் தேதி சாலையில் நடந்து சென்றபோது, செடுத்தான்குப்பம் கிராமத்தைச் சோ்ந்த முருகவேல் மகன் ராக் (எ) ராஜ்குமாா் (27) தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாராம்.
இது தொடா்பாக நெய்வேலி நகரிய போலீஸாா் 8 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனா். காவல் ஆய்வாளா் சுதாகா் விசாரணை நடத்தி, நெய்வேலி வட்டம் 5 பகுதியில் உள்ள மயானத்தில் வியாழக்கிழமை பதுங்கியிருந்த ராஜ்குமாரை பிடிக்கச் சென்றனா்.
அப்போது, அவா் தப்பி ஓடியபோது கீழே விழுந்ததில் கை, காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து, ராஜ்குமாா் கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா். ராஜ்குமாா் மீது நெய்வேலி நகரிய காவல் நிலையத்தில் ரௌடி பட்டியல் பராமரிக்கப்படுகிறது.