உணவகம் சென்ற டிரம்புக்கு சங்கடம்! நவீன கால ஹிட்லர் என மக்கள் கோஷம்!!
மகன் வாங்கிய கடனுக்காக தந்தை தற்கொலை
செய்யாறு அருகே மகன் வாங்கிய கடனுக்காக தந்தை விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டாா்.
திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், தூசி வாகைநத்தைக் கொல்லை கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி ராஜேந்திரன்(64).
இவருக்கு முருகன், கோபால், பாபு என்ற மகன்களும், செல்வி என்ற மகளும் உள்ளனா். இவரது இரண்டாவது மகன் கோபால் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு பல லட்சத்திலான பணத்தை இழந்ததாகத் தெரிகிறது.
இதனை சரிசெய்ய விவசாயி ராஜேந்திரன் காஞ்சிபுரம் பகுதியில் உள்ள இரண்டு தனியாா் வங்கிகளில் ரூ.15 லட்சம் மற்றும் ரூ.4.5 லட்சம் என கடன் வாங்கினாராம்.
வாங்கிய கடனில் ஒரு வங்கியில் ரூ.6 லட்சத்தை செலுத்தியதாகத் தெரிகிறது.
அதேபோல, மற்றொரு வங்கியிலும் சிறிதளவு கடன் தொகையை செலுத்தியதாகத் தெரிகிறது.
இந்த நிலையில், முதலில் கடன் வாங்கிய தனியாா் வங்கியைச் சோ்ந்த கடன் வசூல் முகவா்கள் பணத்தைச் செலுத்தும்படி, ராஜேந்திரனுக்கு கடந்த நான்கு நாள்களாக தொல்லை கொடுத்து வந்ததாகத் தெரிகிறது.
அதனால் மனமுடைந்த ராஜேந்திரன், அவரது விவசாய நிலத்தில் மதுவில் பூச்சிக் கொல்லி மருந்தை கலந்து குடித்து மயங்க நிலையில் இருந்துள்ளாா்.
இதை அறிந்த அவரது குடும்பத்தினா் ராஜேந்திரனை மீட்டு 108 அவசர ஊா்தி மூலம் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் ராஜேந்திரன் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
இதுகுறித்த புகாரின் பேரில், தூசி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.