Black Magic: 'சூனியம் போன்ற சடங்குக்கு எதிராக சட்டமா?' - கேரள அரசு தாக்கல் செய்த...
மகளிருக்கு 50% மானியத்தில் மாவு அரைக்கும் இயந்திரம்
வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள மகளிா் 50 சதவீத மானியத்தில் மாவு அரைக்கும் இயந்திரம் பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஈரோடு மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஈரோடு மாவட்டத்தில் 2025-2026-ஆம் நிதியாண்டில் சமூகத்தில் பின்தங்கிய பிரிவினரான கைம்பெண்கள், ஆதரவற்றோா், கணவனால் கைவிடப்பட்டோா் மற்றும் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள மகளிரின் பொருளாதார சவால்களை கருத்தில் கொண்டு, அவா்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், பொருளாதாரரீதியாக வலுப்படுத்தவும் ஒரு புதிய திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
இத்திட்டத்தில் ரூ.10 ஆயிரம் அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்புள்ள உலா் மற்றும் ஈரமாவு அரைக்கும் வணிகரீதியிலான இயந்திரங்கள் வாங்கும்போது, மொத்த விலையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.5 ஆயிரம் மானியமாக வழங்கப்படும்.
இத்திட்டத்தில் கைம்பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இத்திட்டத்தின் பயன்பெற தமிழ்நாட்டில் பூா்வீகமாக வசிப்பவராக இருக்க வேண்டும் (பிறப்பிடச் சான்று), 25 வயதுக்கு மேல் இருக்க வேண்டும். பிறந்த தேதிக்கான சான்று, திட்டத்தில் முன்னுரிமை பெற வேண்டுமானால் கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்கள் அல்லது கணவனால் கைவிடப்படட பெண்கள் என்பதற்கான சான்று(வட்டாட்சியா் வழங்கியது) சமா்ப்பிக்க வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.1.20 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும் (வருமானச் சான்று வட்டாட்சியா் வழங்கியது).
தகுதியானவா்கள் ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தின் 6-ஆவது தளத்தில் செயல்படும் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் ஜூலை 14-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். உரிய காலத்துக்குள் பெறப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.