‘மகள் பிரிந்தபின்...’ உருக்கமாக பதிவிட்ட இளையராஜா!
இசையமைப்பாளர் இளையராஜா மறைந்த தன் மகள் பவதாரிணி குறித்து பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
பாடகியும் இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளுமான பவதாரிணி புற்றுநோயால் கடந்த ஆண்டு ஜன. 25 ஆம் தேதி இலங்கையில் காலமானார். இன்று அவர் மறைந்து ஓராண்டு நிறைவடைந்ததைத் தொடர்ந்து இசையமைப்பாளர் இளையராஜா ஆடியோ வடிவில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “என் அருமை மகள் பவதாரிணி எங்களைவிட்டு பிரிந்த நாள். அன்பே உருவான இந்த மகள் பிரிந்த பின்புதான் அந்தக் குழந்தை எவ்வளவு அன்பு மையமாக இருந்திருக்கிறாள் என்பது எனக்குப் புரிந்தது. காரணம், என்னுடைய கவனமெல்லாம் இசையிலேயே இருந்ததால் என் குழந்தைகளைக் கவனிக்காமல் விட்டது இப்போது வேதனையைத் தருகிறது.
இதையும் படிக்க: வெளி மாநிலங்களில் ஜெயிலர் - 2 படப்பிடிப்பு!
அந்த வேதனையெல்லாம் மக்களை ஆறுதல்படுத்தும் இசையாக இருப்பது எனக்குக் கொஞ்சம் ஆறுதலாகவும் இருக்கிறது. பிப். 12 ஆம் தேதி பவதாவின் பிறந்த நாள். அன்றே அவருக்கு திதி என்பதால் நினைவு நாள் நிகழ்ச்சியாக நடத்தலாம் என்கிற எண்ணம் இருக்கிறது. அன்று அனைத்து இசைக்கலைஞர்களும் கலந்துகொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.