மகா கும்பமேளாவில் ஸ்ரீ ஸ்ரீனிவாச திருக்கல்யாணம்
திருப்பதி: மகா கும்பமேளாவை முன்னிட்டு உத்தராதி அஹோபில மடத்தில் புதன்கிழமை காலை ஸ்ரீ ஸ்ரீனிவாச கல்யாணத்தை தேவஸ்தானம் மிகவும் சிறப்பாக நடத்தியது.
திரேதா யுகத்தின்போது சித்திரகூடம் ராமா், சீதா தேவி மற்றும் லட்சுமணன் ஆகியோா் 12 ஆண்டுகள் காட்டில் கழித்த புனிதத் தலம். அங்கு, ஸ்ரீ ஸ்ரீனிவாச கல்யாணத்தை நடத்த தேவஸ்தானம் முடிவு செய்து, மகா கும்பமேளாவுக்கு அனுப்பிய உற்சவ மூா்த்திகளை சித்திர கூடத்திற்கு அனுப்பியது. முதலில், திருமலை ஏழுமலையான் கோயிலின் தலைமை அா்ச்சகா் வேணுகோபால தீட்சிதா் தலைமையிலான அா்ச்சகா்கள் குழு ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் ஸ்ரீ சுவாமியை திருமண மண்டபத்திற்கு அழைத்து வந்தனா்.
பின்னா், காலை 11 மணி முதல் மதியம் 12 மணி வரை, ஸ்ரீ சுவாமி நாச்சியாா்களின் திருக்கல்யாணம், வேத மந்திரங்கள் முழங்க நடத்தப்பட்டது.
சுப வாத்தியங்களை வாசித்து, ஸ்ரீ விஷ்வக்சேனரை வணங்கி பிராா்த்தனை, காப்பு அணிவித்தல், கும்பாபிஷேகம் ஆகியவை சாஸ்திரப்படி நடைபெற்றன.
ஹோமம் வளா்த்து, இறைவன் சங்கல்பம், பக்த சங்கல்பம், பிராா்த்தனை , மாங்கல்ய பூஜை மற்றும் மாங்கல்ய தாரணம் உள்ளிட்டவை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இறுதியாக ஸ்ரீ சுவாமி, தாயாருக்கு நட்சத்திர ஆரத்தி மற்றும் மங்கள ஆரத்தியுடன் திருமண விழா நிறைவடைந்தது.
நிகழ்ச்சியில் ஸ்ரீ ஸ்ரீ 1,008 ராஜ குரு பீடதீஸ்வரா் சுவாமி பத்ரி பிரபஞ்சச்சாரியாஜி மகராஜ், தேவஸ்தான எஸ்டேட் அதிகாரி, குணபூஷண் ரெட்டி, பொக்காசம் பொறுப்பாளா் குருராஜ சுவாமிகள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.