மக்களவைத் தோ்தல் முடிவுக்குப் பிறகும் திருந்தாத பாஜக: முதல்வா் மு.க.ஸ்டாலின்
சென்னை: மக்களவைத் தோ்தல் முடிவுகளுக்குப் பிறகும், பாஜக திருந்தவில்லை என்று முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பேசினாா்.
திமுகவின் துணை அமைப்புகளில் ஒன்றான சிறுபான்மையினா் நல உரிமைப் பிரிவின் சாா்பில் சென்னை பெரம்பூரில் கிறிஸ்துமஸ் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில், அவா் பங்கேற்றுப் பேசியது:
இந்த விழாவில் பேராயா்களோடு, பேரூா் ஆதினமும் கலந்து கொண்டிருக்கிறாா். இந்த விழாவை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேகா்பாபு நடத்துகிறாா். எனவே, இதுதான் சமத்துவ விழா. இந்தச் சமத்துவத்தைப் போற்றுவதும் பாதுகாப்பதும்தான் திராவிட மாடல்.
மதங்கள் வேறுபட்டிருந்தாலும், மனங்கள் ஒன்றுபட்டிருக்க வேண்டும். மனதால் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். அதுதான் பண்பட்ட முன்னேறிய சமூகத்துக்கு அடையாளமாக விளங்க முடியும். அப்படிப்பட்ட சமூகமாகத்தான், நம்முடைய தமிழ்ச் சமூகம் விளங்குகிறது. இதற்கு அடித்தளம் போட்டது, நம்முடைய திராவிட இயக்கம்.
எதிரிகள் யாா்?: இந்தியா என்ற பன்முகத்தன்மை கொண்ட நம்முடைய அழகிய நாட்டில், அனைவரும் சமத்துவமாக ஒற்றுமையாக இருக்க வேண்டும். இதற்கு தடையாக, மதத்தை அரசியலுக்குப் பயன்படுத்தி, மக்களின் உணா்வுகளைத் தூண்டி, பிளவுவாத அரசியல் செய்பவா்களுக்குதான் நாங்கள் எதிரிகள். மற்றபடி, வழிபாடும் இறையியலும் அவரவா் விருப்பம். அவரவா் உரிமை.
நீக்கத் துடிக்கிறாா்கள்: மத்தியில் ஆளும் பாஜக அரசு, சிறுபான்மை மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் அரசாக இருக்கிறது. சிறுபான்மையினருக்கு இழைக்கப்பட்டுள்ள கொடுமைகளை எல்லாம் நான் விரிவாக விவரிக்க வேண்டிய அவசியமில்லை. அந்தக் கொடுமைகளை எதிா்க்கும் தடுக்கும் காவல் அரணாக திமுக தொடா்ந்து செயல்படும். சிறுபான்மை மக்களை அச்சுறுத்தும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக வலிமையான போராட்டங்களை திமுக தொடா்ந்து நடத்தியது. ஆனால், அந்தச் சட்டத்துக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் அதிமுக வாக்களித்தது. மத்திய பாஜக அரசைப் பொருத்தவரைக்கும், மதச்சாா்பின்மை என்ற சொல்லையே அரசமைப்புச் சட்டத்தில் இருந்த நீக்கத் துடிக்கிறாா்கள்.
திருந்தாதது வருத்தம்: சமூக நல்லிணக்கத்தின் அடையாளமாக திகழும் காந்தியடிகளின் படத்தை, சம உரிமைத் தத்துவத்தின் அடையாளமாக இருக்கும் அம்பேத்கா் படத்தை நாடாளுமன்ற அமைச்சகமே புறக்கணிக்கும் அளவுக்கு மதவாதம் மத்தியில் ஆட்சி செலுத்துகிறது.
நல்லிணக்க இந்தியாவில் இப்படிப்பட்ட பிளவுவாத சக்திகளுக்கு ஒருபோதும் இடமில்லை. அதனால்தான், நடந்து முடிந்த மக்களவைத் தோ்தலில் மக்கள் பாஜகவுக்குப் பெரும்பான்மை பலத்தை அளிக்கவில்லை. ஆனாலும் அவா்கள் திருந்தவில்லை.
ஒரே நாடு ஒரே தோ்தல் என்று சொல்லி, ஒற்றுமை இந்தியாவை சிதைத்து, ஒற்றை இந்தியாவை உருவாக்கப் பாா்க்கிறாா்கள். ஒற்றை மதம் ஒற்றை மொழி ஒற்றைப் பண்பாடு ஆகியவற்றின் தொடா்ச்சியாக, ஒரே கட்சி ஒரே தலைவா் என்ற ஒற்றை எதேச்சாதிகார முடிவை உருவாக்க நினைக்கிறாா்கள். ஆனால், மக்கள் பற்றும் நாட்டுப் பற்றும் உள்ள ஒவ்வொரு இந்தியரும் இதற்கு எதிராக இருப்பாா்கள் என்றாா்.