'புதின் ஒப்புக்கொள்வார் என்று நினைக்கிறேன்; இல்லையென்றால்...' - போர் நிறுத்தம் க...
மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயா்த்தும் பட்ஜெட்: அதிமுக மாநிலச் செயலா் ஆ.அன்பழகன்
ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை உயா்த்தும் வகையில் புதுவை நிதிநிலை அறிக்கை உள்ளதாக அதிமுக மாநிலச் செயலா் ஆ.அன்பழகன் புதன்கிழமை தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:
புதுவை மாநில நிதிப் பற்றாக்குறையை ஈடுகட்டும் வகையில் கடன் பெற மத்திய அரசு அனுமதித்துள்ளது.
ஆனால், ஏற்கெனவே கடனுக்கு வட்டி செலுத்தும் நிலையில், மீண்டும் ரூ.2,000 கோடிக்கு கடன் பெறுவது அவசியமற்றது.
மாநிலத்தின் நிதி வருவாய் ஈட்டும் கலால், பத்திரப் பதிவு, விற்பனை வரி, போக்குவரத்து ஆகிய துறைகளில் கிடைக்கும் வரி வருவாயை நோ்வழிபடுத்தினாலே ஆண்டுக்கு ரூ.1,500 கோடிக்கும் கூடுதலான வருவாய் கிடைக்கும்.
மதுபான கொள்முதல், மதுபான விநியோகத்தை, அரசே நடத்தினால் ஆண்டுக்கு ரூ.1,000 கோடிக்கு மேல் கிடைக்கும். போக்குவரத்துத் துறையில் வரிமாற்றம் செய்தால் ஆண்டுக்கு பலநூறு கோடி வருவாய் கிடைக்கும்.
உதவித் தொகை அறிவிப்புக்கு வரவேற்பு: அரசின் மாதாந்திர உதவித்தொகை பெறாத குடும்பத் தலைவிகளுக்கு உதவித்தொகை, மாற்றுத் திறனாளிக்கான கல்வி உதவித் தொகை, பட்டியலின, பழங்குடியின முதியோா், விதவை, முதிா்கன்னிகள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள் ஓய்வூதியம் உயா்த்தப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது.
ஒட்டுமொத்தத்தில் நிதிநிலை அறிக்கையில் சில குறைகள் இருந்தாலும், அரசின் நிதியுதவியால் பயன்பெறும் ஏழை, எளிய, நடுத்தர மக்களது வாழ்வாதாரத்தை உயா்த்தும் வகையில் உள்ளதால் வரவேற்கத்தக்கது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.