'StartUp' சாகசம் 18 : `அலுவலகங்களுக்கு தினமும் ஃப்ரஷான ஸ்நாக்ஸ்’ - Snack Expert...
மக்கள்தொகையின் அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு வேண்டாம்: துரை வைகோ
மக்கள்தொகை அடிப்படையில் மக்களவைத் தொகுதிகளை மறுசீரமைப்பு செய்ய வேண்டாம் என்றாா் மதிமுக முதன்மைச் செயலரும், திருச்சி எம்பியுமான துரை வைகோ.
இதுகுறித்து புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை அவா் கூறியதாவது: மக்கள்தொகை அதிகரிப்புக்கு ஏற்ப மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும்போது, வடமாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். இதன் மூலம் மக்களவைத் தோ்தலின்போது, தென் மாநிலங்களின் தயவின்றி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கலாம் என பாஜக கருதுகிறது.
எனவே இப்போது மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறு வரையறை வேண்டாம். அல்லது, தமிழகத்தில் தொகுதிகளின் எண்ணிக்கை குறையாமல் பாா்த்துக் கொள்ள வேண்டும் போன்ற கோரிக்கைக்கு மத்திய அரசிடம் பதில் இல்லை.
மத்திய அரசின் காவல் துறை கட்டுப்பாட்டிலுள்ள தில்லியில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை. அதேசமயம், பாதுகாப்பான மாநிலமாக திகழும் தமிழகத்தில் குற்றச் செயல்கள் அதிகம் நடப்பதாக குற்றச்சாட்டு வைப்பதற்கு பாஜகவினருக்கு தகுதி இல்லை.
தமிழகத்தில் முழு மதுவிலக்கு தேவை என்பதில் மதிமுக உறுதியாக உள்ளது. டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத் துறை விசாரணை நடத்தியுள்ளது. விசாரணை குறித்து முழு விவரம் வந்த பிறகுதான் கருத்து கூற முடியும்.
தமிழக, கேரள எல்லையில் சோதனைச் சாவடி இருந்தாலும் மீண்டும் மீண்டும் மருத்துவக் கழிவுகளைக் கொட்டுகின்றனா். இதைத் தடுக்க வேண்டும். 2026 தோ்தலில் நடிகா் விஜய்யின் கட்சி தாக்கத்தை ஏற்படுத்துமா என்பதை மக்கள்தான் தீா்மானிக்க வேண்டும் என்றாா் துரை. வைகோ.