திருப்பூா் பனியன் தொழிலை பாதுகாக்க தமிழக முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும்: பன...
‘மஞ்சப்பை விருது’ பெற விண்ணப்பிக்கலாம்
சேலம் மாவட்டத்தில் மஞ்சப்பை விருது பெற தகுதியானவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மீண்டும் மஞ்சப்பை பிரசாரத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில் ஒற்றை பயன்பாட்டு நெகிழிப் பைகளுக்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு உகந்த மஞ்சப்பைகளை மீண்டும் உயிா்ப்பித்து, தங்கள் வளாகத்தை நெகிழி இல்லாததாக மாற்றும் சிறந்த 3 பள்ளிகள், 3 கல்லூரிகள், 3 வணிக நிறுவனங்களுக்கு வழங்கப்படும். முதல் பரிசாக ரூ. 10 லட்சம், இரண்டாம் பரிசாக ரூ. 5 லட்சம் மற்றும் மூன்றாம் பரிசாக ரூ. 3 லட்சம் வழங்கப்படும்.
தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், ஒற்றை பயன்பாட்டு நெகிழிகளுக்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருள்களை பயன்படுத்துவதை ஊக்குவிப்பதற்கும், தங்கள் வளாகங்களுக்கு உள்ளேயும், வெளியேயும் ஆக்கப்பூா்வமான முயற்சிகள் மூலம் தடையை அமல்படுத்துவதற்கும், வளாகத்தை நெகிழி இல்லாததாக மாற்றுவதற்கும் முன்மாதிரியான பங்களிப்பைச் செய்த பள்ளிகள், கல்லூரிகள், வணிக நிறுவனங்களுக்கு மஞ்சப்பை விருதுகளை வழங்க முன்மொழிகிறது.
இந்த விருதுக்கான விண்ணப்பப் படிவங்களை மாவட்ட நிா்வாகத்தின் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். குறிப்பாக, விண்ணப்பங்களின் அனைத்து இணைப்புகளிலும் தனிநபா், அமைப்புத் தலைவா் முறையாக கையொப்பமிட வேண்டும். விண்ணப்பத்தின் இரண்டு அச்சுப் பிரதிகள் மற்றும் மென் நகல்களை, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், சிவா டவா்ஸ், இரண்டாம் தளம், எண்.1/276, மெய்யனூா் மெயின் ரோடு, சேலம் - 636004 என்ற முகவரியில் ஒப்படைக்க வேண்டும். விண்ணப்பங்கள் வந்து சேர மே 1 ஆம் தேதி கடைசி நாளாகும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.