மணல் கடத்தல் வாகனத்தை தடுத்து நிறுத்த முயன்ற வட்டாட்சியர் மீது வாகனத்தை ஏற்றி கொலை செய்ய முயற்சி
தஞ்சாவூர் : மணல் கடத்தி சென்ற வாகனத்தை தடுத்து நிறுத்த முயன்ற வட்டாட்சியர் மீது வாகனத்தை ஏற்றி கொலை செய்ய முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக தலைமறைவாகி உள்ளவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா ராராமுத்திரை கோட்டை கிராமத்தில் வீட்டுமனை பட்டா வழங்குவதற்காக, பாபநாசம் வட்டாட்சியர் செந்தில்குமார் மற்றும் வருவாய்த் துறையினர் ஆய்வுக்கு சென்றுவிட்டு அலுவலகம் நோக்கி திரும்பிக் கொண்டிருந்தனர்.
இதையும் படிக்க:செந்தில் பாலாஜி அமைச்சரானதில் எந்த அவசரமும் இல்லை: சட்ட அமைச்சர் ரகுபதி
அப்போது, லாரியில் மணல் ஏற்றிக் கொண்டு வந்தவர்கள் லாரியை பிடிப்பதற்காக அதிகாரிகள் வருவதாக கருதி, வருவாய்த் துறையினர் வந்த ஜீப்பின் மீது மோதுவதற்காக வேகமாக லாரி வந்ததை அறிந்த ஜீப் ஓட்டுநர் சுதாரித்துக் கொண்டதை அடுத்து ஜீப்பில் இருந்த அரசு அதிகாரிகள் நூலிழையில் உயிர் தப்பினர்.
தொடர்ந்து லாரியை பிடிக்க அதிகாரிகள் முயன்றபோது சுமார் 20-கிலோ மீட்டர் தூரம் வாகனத்தை நிறுத்தாமலும், வட்டாட்சியர் வாகனத்தை இடிக்கும் வகையில் அச்சுறுத்தியும், மேலும் வட்டாட்சியர் வாகனத்தினை முன்னேற விடாமலும் இருசக்கர வாகனம் மூலம் இருவர் தடுத்துள்ள நிலையில், மணல் ஏற்றி வந்த லாரியை குளிச்சப்பட்டு என்ற இடத்தில் நிறுத்திவிட்டு அதில் இருந்தவர்கள் தப்பிச் சென்றுவிட்டனர்.
பின்னர், மணல் லாரியை கைப்பற்றி அம்மாப்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மணல் கடத்தி சென்ற வாகனத்தை தடுத்து நிறுத்த முயன்ற வட்டாட்சியரை கொலை செய்ய முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.