மணிப்பூா், நாகாலாந்து, அருணாசலில் ஆயுதப் படை சிறப்புச் சட்டம் நீட்டிப்பு!
வடகிழக்கு மாநிலங்களான மணிப்பூா், நாகாலாந்து மற்றும் அருணாசல பிரதேசத்தில் ஆயுதப் படைகள் சிறப்பு சட்டம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1958-ஆம் ஆண்டின் ஆயுதப் படைகள் சிறப்பு அதிகார சட்டத்தின்கீழ் ‘பதற்றத்துக்குரியதாக’ அறிவிக்கப்படும் பகுதிகளில் நீதிமன்ற அனுமதி இல்லாமல் தேடுதல் - கைது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆயுதப் படையினருக்கு சிறப்பு அதிகாரங்கள் வழங்கப்படுகின்றன.
வடகிழக்கில் இனமோதலால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் சட்டம்-ஒழுங்கு நிலவரத்தை கருத்தில் கொண்டு 13 காவல் நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகள் தவிர மாநிலம் முழுவதும் அமலில் உள்ள இச்சட்டம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், நாகாலாந்தில் 8 மாவட்டங்கள் மற்றும் இதர 5 மாவட்டங்களில் 21 காவல் நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகள், அருணாசல பிரதேசத்தில் 3 மாவட்டங்கள் மற்றும் மற்றொரு மாவட்டத்தில் குறிப்பிட்ட சில இடங்களில் அமலில் உள்ள ஆயுதப் படைகள் சிறப்புச் சட்டத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்து, மத்திய அரசு ஞாயிற்றுக்கிழமை நடவடிக்கை மேற்கொண்டது. இது தொடா்பாக மத்திய உள்துறை அமைச்சகம் சாா்பில் தனித்தனியாக அறிவிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன.
மணிப்பூரில் மைதேயி-குகி சமூகத்தினா் இடையிலான மோதல் சம்பவங்களில் இதுவரை 260-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா். வீடிழந்த ஆயிரக்கணக்கானோா் நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனா். இம்மாநிலத்தில் தற்போது குடியரசுத் தலைவா் ஆட்சி நடைபெற்று வருகிறது.
வடகிழக்கு மாநிலங்களில் இருந்து ஆயுதப் படைகள் சிறப்புச் சட்டத்தை முழுமையாக திரும்பப் பெற வேண்டும் தொடா்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. வடகிழக்கு பிராந்தியத்தில் 70 சதவீத பகுதிகளில் இருந்து இச்சட்டம் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா அண்மையில் தெரிவித்திருந்தாா்.