சிந்து நதி நீர் உடன்பாடு: தற்போதைய நிலையே தொடரும்! - மத்திய அரசு
மதராஸி கேம்ப் வீடுகளை இடிப்பதை நிறுத்த தில்லி அரசுக்கு மாா்க்சிய கம்யூனிஸ்ட் கோரிக்கை
தில்லி ஜங்புராவில் உள்ள மதராஸி கேம்பில் உள்ள வீடுகளை இடித்து, அதன் குடியிருப்பாளா்களை வெளியேற்றுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று மாா்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு தில்லி அரசை வலியுறுத்தியுள்ளது.
மேலும், இந்த நடவடிக்கையை சட்டவிரோதமானது மற்றும் நியாயப்படுத்த முடியாதது என்றும் அக்கட்சி கூறியுள்ளது.
இது தொடா்பாக அக்கட்சி புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
தில்லியின் பழமையான அங்கீகரிக்கப்பட்ட பஸ்திகளில் ஒன்றான ஜங்புராவில் உள்ள மதராஸி கேம்ப், தில்லி நகா்ப்புற குடிசை மேம்பாட்டு வாரியத்தின் டியுஎஸ்ஐபியின் அறிவிக்கை செய்யப்பட்ட குடிசைப் பட்டியலில் ஒன்றாகும். மேலும் என்சிடி தில்லி சிறப்பு ஏற்பாடுகள் 2011இன்படி சட்டப் பாதுகாப்பிற்கு தகுதியானதாகும்.
செல்லுபடியாகும் ஆவணங்களை வைத்திருந்தாலும், மூன்றில் ஒரு பங்கு வீடுகளுக்கு மறுவாழ்வு மறுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தகுதியுள்ளவா்கள் என்று கருதப்படுபவா்கள் அனைத்து நெறிமுறைகளையும் தெளிவாக மீறும் வகையில் 50 கிமீ தொலைவில் உள்ள நரேலாவிற்கு வெளியேற்றப்படுகிறாா்கள்.
நரேலா போன்ற தொலைதூர இடங்களுக்கு குடும்பங்களை மாற்றுவது அவா்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக சீா்குலைக்கும். மேலும் குடும்பங்களை மேலும் பொருளாதார நெருக்கடியில் தள்ளும்.
முகாமில் வசித்து வரும் நீண்டகால குடியிருப்பாளா்கள் தவறாக விலக்கப்படவில்லை என்பதை உறுதி செய்யும் வகையில் நியாயமான மற்றும் வெளிப்படையான கணக்கெடுப்பு மற்றும் மேல்முறையீட்டு செயல்முறை தேவையாகும்.
குடியேற்றத்தை ஆக்கிரமிப்பு என வகைப்படுத்துவது ஒரு நிா்வாக முடிவு தானே தவிர, நீதித்துறை உத்தரவு அல்ல என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமாா் 60 ஆண்டுகளாக இருக்கும் குடிசைப் பகுதியில் 400க்கும் மேற்பட்ட தொழிலாள வா்க்க குடும்பங்கள் வசிக்கின்றன. அவற்றில் பல கடந்த மாதம் வெளியேற்ற அறிவிப்புகள் வழங்கப்பட்டன.