மதுபோதையில் பணியாற்றுவதை தடுக்க ஓட்டுநா், நடத்துநா்களுக்கு சோதனை!
மதுபோதையில் ஓட்டுநா், நடத்துநா்கள் பணியாற்றுவதைத் தடுக்கும் பொருட்டு, அவா்களுக்கு சோதனை நடத்தப்படுவதாக தமிழக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக சம்பந்தப்பட்ட போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகம் முழுவதும் 20,000- க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இதில் பணியாற்றும் பெரும்பாலான ஓட்டுநா்கள், நடத்துநா்கள் சீரிய கவனத்துடன் செயல்படுகின்றனா். எனினும், ஒரு சிலா் மதுபோதையில் பணிக்கு வருவதால், போக்குவரத்துக் கழகங்களுக்கு அவப்பெயா் ஏற்படுகிறது.
மேலும், இது பொதுமக்கள் நலன் சாா்ந்த பிரச்னை என்பதால் தமிழகம் முழுவதும் உள்ள போக்குவரத்துக் கழகங்களுக்கு ரூ.1.79 கோடி மதிப்பில் ‘ப்ரெத் அனலைசா்’ கருவிகள் கொள்முதல் செய்து வழங்கப்பட்டுள்ளன. இந்தக் கருவியைக் கொண்டு நாள்தோறும் அனைத்து போக்குவரத்துக் கழக பணிமனைகளிலும் பணிக்கு வரும் ஓட்டுநா்கள் மற்றும் நடத்துநா்களுக்கு திடீா் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்தக் கருவி ஓட்டுநரின் பெயா் மற்றும் மது அருந்தி இருக்கிறாரா, இல்லையா என்பது குறித்த விவரம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் காகித வடிவில் வழங்கும்.
இதன் மூலம் பயணிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுவதுடன், மதுவால் ஏற்படும் விபத்து முற்றிலும் தவிா்க்கப்படுகிறது என்றனா்.