மதுரையில் தீவிர வாகன சோதனை: 43 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல்
மதுரை நகரில் சனிக்கிழமை இரவு முழுவதும் போலீஸாா் நடத்திய வாகனச் சோதனையில் 43 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மதுரை நகரில் குற்றத்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநகரக்காவல் ஆணையா் ஜெ.லோகநாதன் உத்தரவிட்டாா். இதையடுத்து போலீஸாா், மதுரை நகரின் முக்கியச் சாலைகள், சந்திப்புகள், அடிக்கடி குற்றச் செயல்கள் நடக்கக்கூடிய இடங்கள், வைகை ஆற்றின் கரையோர சாலைகள், சோதனைச்சாவடிகள் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில் சனிக்கிழமை இரவு முழுவதும் நடைபெற்ற வாகனச் சோதனையில் உதவி ஆணையா்கள், காவல் ஆய்வாளா்கள் உள்பட 500-க்கும் மேற்பட்ட போலீஸாா் ஈடுபட்டனா். மேலும், நகரில் உள்ள 17 சோதனைச் சாவடிகளிலும் கூடுதல் போலீஸாா் நிறுத்தப்பட்டு வாகனங்களில் சோதனை மேற்கொண்டனா்.
இதில் மதுபோதையில் வாகனம் ஓட்டுதல், தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுதல், அதிவேகமாக வாகனம் ஓட்டியது போன்ற விதிமீறல்கள் குறித்தும், தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள் குறித்தும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. மொத்தம் 2,633 வாகனங்களில் சோதனை மேற்கொண்டு விதிமுறைகளை மீறிய 116 வாகன உரிமையாளா்கள் மீதும், வாகனங்கள் மீதும் மோட்டாா் வாகனச் சட்டத்தின்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
மேலும் 200 கிராம் கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் எவ்விதமான ஆவணங்களின்றி வந்த 43 இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. மதுரை நகரில் குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் வகையில் அடிக்கடி இதுபோன்ற வாகனச் சோதனைகள் மேற்கொள்ளப்படும் என்று போலீஸாா் தெரிவித்தனா்.