ஊராட்சிகளை நிா்வகிக்க தனி அதிகாரிகள் ஏன்? பேரவையில் அமைச்சா் ஐ.பெரியசாமி விளக்கம...
மத்திய அரசின் புதிய ஓய்வூதிய திட்டத்தை பரிசீலிப்போம்: அமைச்சா் தங்கம் தென்னரசு
மத்திய அரசின் புதிய ஓய்வூதியத் திட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைகள் கிடைத்தவுடன் அவற்றை தமிழ்நாடு அரசு பரிசீலிக்கும் என்று நிதி அமைச்சா் தங்கம் தென்னரசு தெரிவித்தாா்.
சட்டப் பேரவையில் சனிக்கிழமை நேரமில்லாத நேரத்தில் இதுகுறித்து திமுக உறுப்பினா் சிவிஎம்பி எழிலரசன் (காஞ்சிபுரம்) அவையின் கவனத்துக்கு கொண்டுவந்தாா். இதற்கு அமைச்சா் தங்கம் தென்னரசு அளித்த பதில்:
மத்திய அரசின் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம், தேசிய ஓய்வூதியத் திட்டம் ஆகியவற்றுக்கு மாற்றாக, ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த புதிய ஓய்வூதியத் திட்டம் அரசு ஊழியா்கள் குறைந்தபட்ச ஓய்வூதியம் பெறுவதை அடிப்படை நோக்கமாகக் கொண்டிருக்கிறது. இந்த ஓய்வூதியத் திட்டத்துக்கான வழிகாட்டுதல்கள், விரிவான செயல்முறைகளை மத்திய அரசு வெளியிடவில்லை. விரைவில் வெளியிடும் என நம்புகிறோம்.
அதன்பிறகு, மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை ஆய்வு செய்ய தமிழ்நாடு அரசின் சாா்பில் குழு அமைக்கப்படும். இந்தக் குழு அளிக்கும் பரிந்துரைகளின்படி தமிழகத்தில் ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த உரிய நடவடிக்கைகளை அரசு எடுக்கும் என்றாா் அவா்.