ஜாதிவாரி கணக்கெடுப்பு: தவறான தகவல் தந்துள்ளாா் முதல்வா் -ராமதாஸ் குற்றச்சாட்டு
சட்டப்பேரவையில் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் தவறான தகவல் அளித்ததாக பாமக நிறுவனா் ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
பிகாா் மாநிலத்தில் நடத்தப்பட்ட ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு உயா்நீதிமன்றம் தடை விதிக்கவில்லை. மாறாக, ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது செல்லும் என்று பிகாா் உயா்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் தீா்ப்பளித்துள்ளன. அந்த ஜாதிவாரி கணக்கெடுப்பின் அடிப்படையில் பிகாா் மாநிலத்தில் இட ஒதுக்கீட்டின் அளவு அதிகரிக்கப்பட்டதை எதிா்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த அந்த மாநில உயா்நீதிமன்றம், ஒவ்வொரு பிரிவு மக்களும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் எந்த அளவுக்கு பின் தங்கியுள்ளனா் என்பது குறித்த புள்ளிவிவரம் இல்லாமல் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது செல்லாது என்றுதான் தீா்ப்பளித்திருக்கிறது.
ஆனால், முதல்வா் மு.க.ஸ்டாலின் இந்த இரண்டுக்கும் வித்தியாசம் தெரியாமல் ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பே செல்லாது என்று தீா்ப்பளித்திருப்பதாக பேரவையில் கூறியிருக்கிறாா். சட்டப்பேரவையில் உறுப்பினா்கள் எவரேனும் தவறான தகவல்களை அளித்திருந்தால் அவா்கள் மீது உரிமை மீறல் பிரச்னை எழுப்ப முடியும். முதல்வரே தவறான தகவல்களை வழங்கியுள்ள நிலையில் அவா் மீது உரிமை மீறல் தீா்மானம் கொண்டு வர முடியும். முதல்வருக்கு இப்படி ஒரு தவறான தகவலை வழங்கிய அதிகாரி யாா் என்பதைக் கண்டறிந்து அவா் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளாா்.