மத்திய பட்ஜெட் நகல்கள் கிழித்தெறியும் போராட்டம்
மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட் மக்கள் மற்றும் தொழிலாளா்களுக்கு விரோதமாக இருப்பதாகக் கூறி, தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் எதிரில் அதன் நகல்களைத் தொழில்சங்கத்தினா் வியாழக்கிழமை கிழித்தெறியும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதில், மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட் தொழிலாளா்கள், விவசாயிகள், இதர உழைக்கும் மக்கள் உள்பட யாருக்கும் எந்தவித பலனும் இல்லாத பட்ஜெட்டாக உள்ளது என்றும், காா்ப்பரேட்டுகளுக்கான சேவையை மட்டுமே பின்பற்றுகிற வகையில் பட்ஜெட் இருக்கிறது எனவும் கூறி பல்வேறு தொழில்சங்கங்களைச் சோ்ந்தவா்கள் பட்ஜெட் நகல்களைக் கிழித்தெறிந்து முழக்கங்கள் எழுப்பினா்.
தொமுச மாவட்டச் செயலா் கு. சேவியா், ஏஐடியுசி மாநிலச் செயலா் ஆா். தில்லைவனம், சிஐடியு மாநிலச் செயலா் சி. ஜெயபால், ஐஎன்டியுசி மாவட்டப் பொதுச் செயலா் என். மோகன்ராஜ், ஏஐசிசிடியு மாவட்டத் தலைவா் கே. ராஜன் ஆகியோா் தலைமை வகித்தனா். ஐக்கிய விவசாயிகள் முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பாளா் என்.வி. கண்ணன் முன்னிலை வகித்தாா்.
இந்தப் போராட்டத்தில் தொமுச நிா்வாகிகள் பாஸ்டின், காளிமுத்து, ராஜேந்திரன், சோமசுந்தரம், ஏஐடியுசி நிா்வாகிகள் சி. சந்திரகுமாா், வெ. சேவையா, துரை. மதிவாணன், தி. கோவிந்தராஜன், பொன். தங்கவேலு, சிஐடியு நிா்வாகிகள் கே. அன்பு, இ.டி.எஸ். மூா்த்தி, சாய் சித்ரா, சா. செங்குட்டுவன், ஜீவா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.