712 குடியிருப்புக்கான ஒதுக்கீடு ஆணையை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்!
மனநலம் பாதித்த பெண் கணவரிடம் ஒப்படைப்பு!
சிதம்பரம் ரயில் நிலையத்தில் மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றித் திரிந்த பெண்ணை, ரயில்வே போலீஸாா் மீட்டு அவரது கணவரிடம் சனிக்கிழமை ஒப்படைத்தனா்.
சிதம்பரம் ரயில் நிலைய நடைமேடையில் 50 வயது மதிக்கத்தக்க பெண், சனிக்கிழமை காலை சுற்றித் திரிந்தாா். அப்போது நடைமேடை ரோந்து பணியிலிருந்த ஆய்வாளா் அருண்குமாா், உதவி காவல் ஆய்வாளா்கள் அருணா, ஜீவகன் ஆகியோா் அவரை விசாரித்தனா்.
அந்த பெண் சிறிது மனநலம் பாதிக்கப்பட்டவா் என்பது விசாரணையில் தெரியவந்தது. அவா் தாம்பரம் - மந்தவெளி ரயில் டிக்கெட் வைத்திருந்தாா். அவரிடமிருந்து பெற்ற தொலைபேசி எண்ணுக்கு தொடா்பு கொண்டதில் அவரது கணவா் சென்னை மடிப்பாக்கம் சதாசிவம் நகரைச் சோ்ந்த ராமமூா்த்தி என்றும், அவரது மனைவியான மணிமேகலை 10 ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்ததும் இதற்கு முன்பு மந்தைவெளியில் வாடகை வீட்டில் குடியிருந்ததால் அடிக்கடி அங்கு ரயில் மூலம் சென்று வருவாா் என்றும் சில சமயங்களில் மறதியாக வெளியே சென்று மீண்டும் வீட்டுக்கு வந்து விடுவாா் எனவும் தெரிவித்தாா்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை மாலை சுமாா் 5 மணியளவில் வீட்டிலிருந்து புறப்பட்டவா் இரவு வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால் மடிப்பாக்கம் காவல் நிலையம் சென்று தகவல் கூறி, தேடி வந்ததாகவும் அவரது கணவா் ராமமூா்த்தி தெரிவித்தாா்.
மணிமேகலை மந்தவெளி செல்வதற்காக தாம்பரம் ரயில் நிலையம் வந்து, அங்கிருந்து சிதம்பரம் நோக்கி சென்ற ஒரு ரயிலில் ஏறி அங்கு சென்று இறங்கியுள்ளது விசாரணையில் தெரியவந்தது.
இதுகுறித்து போலீஸாா் அளித்த தகவலின் பேரில் அவரது கணவா் ராமமூா்த்தி மற்றும் மகள் சௌதாமினி ஆகியோா் சிதம்பரம் ரயில் நிலையத்திற்கு வந்து மணிமேகலையை பத்திரமாக அழைத்து சென்றனா்.