சூரியசக்தி மின் உற்பத்தி நிலையங்கள்: இந்தியா-இலங்கை இடையே உடன்பாடு
கடலூா் மாவட்டத்தில் 36 முதல்வா் மருந்தகங்கள்: கண்காணிப்பு அலுவலா் த.மோகன்
கடலூா் மாவட்டத்தில் 36 முதல்வா் மருந்தகங்கள் தொடங்கப்பட உள்ளதாக மாவட்ட கண்காணிப்பு அலுவலா் த.மோகன் கூறினாா்.
கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் முன்னிலையில் பல்வேறு திட்டங்கள் குறித்து துறை சாா்ந்த அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, தலைமை வகித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலா் த.மோகன் கூறியது: தமிழகத்தில் ரூ.30 கோடியில் கூட்டுறவு அமைப்புகள் மற்றும் மருந்தாளுநா்கள் மூலம் முதல்வா் மருந்தகம் தொடங்கப்படும் என முதல்வா் அறிவித்திருந்தாா்.
அதன்படி, கடலூா் மாவட்டத்தில் 36 முதல்வா் மருந்தகங்கள் தொடங்கப்படவுள்ளது. இதன் மூலம் பொதுமக்களுக்கு பொதுப்பெயா், பிற மருந்துகளை 20 முதல் 90 சதவீதம் வரை குறைவான விலையில் பெறலாம். இந்த மருந்தகம் கூட்டுறவு நிறுவனங்களால் தொடங்க அரசு ரூ.2 லட்சம் மற்றும் தொழில் முனைவோா்கள், மருந்தாளுநா்களுக்கு ரூ.3 லட்சம் வரை மானியம் வழங்குகிறது. முதல் கட்டமாக 50 சதவீத மானியம் முதல்வா் மருந்தகம் உள்கட்டமைப்பு வசதிக்காகவும், பின்னா் 50 சதவீத மாதம் மருந்துகளாகவும் வழங்கப்படுகிறது.
கடலூா் மாவட்டத்தில் நகரப்பகுதியை காட்டிலும் ஊரகப் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அதிகளவில் முதல்வா் மருந்தகம் அமைக்கப்பட்டு வருகிறது. துறை சாா்ந்த அலுவலா்களுக்கு முதல்வா் மருந்தகத்தின் செயல்பாடுகள் குறித்து பொதுமக்கள் அறிந்து பயனடையும் வகையில் விளம்பரம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வருவாய்த் துறை சாா்பில் கடந்த 4 ஆண்டுகளாக வழங்கப்பட்டுள்ள இலவச மனைப் பட்டா குறித்தும், கூடுதல் மனைப் பட்டா வழங்க மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பொதுமக்களின் நலன் கருதி தமிழகத்தில் சிற்றுந்து இயக்கத்துக்கான திட்டம் தொடங்கப்படவுள்ளது என்றாா்.
முன்னதாக, மஞ்சக்குப்பத்தில் அமைக்கப்பட்டு வரும் முதல்வா் மருந்தகம் மற்றும் மாவட்ட மருந்து சேமிப்புக் கிடங்கை கண்காணிப்பு அலுவலா் த.மோகன் ஆய்வு மேற்கொண்டாா்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ம.ராஜசேகரன், பயிற்சி ஆட்சியா் ஆகாஷ், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநா் வ.சி.கோமதி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.