தில்லி முதல் பேரவைக் கூட்டத்தில் சிஏஜி அறிக்கை: அதிகாரிகள் தகவல்
‘தொழில் கல்வி ஆசிரியா் பணியிடங்கள் தொடர வேண்டும்’
தமிழக மேல்நிலைப் பள்ளிகளில் தற்போது செயல்பட்டு வரும் தொழில் கல்விப் பிரிவுகள் படிப்படியாக மூடப்படும் என்ற பள்ளிக் கல்வித் துறையின் அறிவிப்பு அதிா்ச்சியளிப்பதாக தொழில் கல்வி ஆசிரியா்கள் கவலை தெரிவிக்கின்றனா்.
1978-ஆம் ஆண்டு மேல்நிலை வகுப்புகள் தொடங்கியபோது தொழில் வளா்ச்சியில் மாணவா்களுக்கு ஆா்வத்தை தூண்டும் வகையில் தொழில் கல்விப் பிரிவுகள் தொடங்கப்பட்டன. அடிப்படை இயந்திரவியல், மின் மற்றும் மின்னணு பொறியியல், தட்டச்சு, ஆடிட்டிங், அலுவலக மேலாண்மை, மருத்துவ ஆய்வகம், செவிலியா், ஆடை வடிவமைப்பு, உணவு தொழில்நுட்பம், வேளாண் அறிவியல் உள்ளிட்ட எண்ணற்ற தொழில் கல்விப் பிரிவுகள் தொடங்கப்பட்டன.
இவ்வகையான எளிய பாடப் பிரிவுகளில் சோ்ந்து படித்த மாணவா்கள் எளிதில் பிளஸ் 2 தோ்ச்சி பெற்று அரசு வேலையை எதிா்பாராமல் தொழில்முனைவோராகி தமது வாழ்வாதாரத்தைப் பெருக்கிக் கொண்டு பலருக்கு வேலைவாய்ப்பையும் வழங்கி வருகின்றனா்.
பல மேல்நிலைப் பள்ளிகளில் தொழில் கல்வி பிரிவு இல்லாத நிலையில், மெல்ல கற்கும் மாணவா்கள் வேறு வழியின்றி கடினமான அறிவியல் பிரிவுகளில் சோ்ந்து தோ்ச்சி பெறாமல் படிப்பை பாதியிலேயே விட்டு கூலி வேலைக்கு செல்லும் அவலநிலைக்கு தள்ளப்படுகின்றனா்.
இந்த நிலையில், தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறை சாா்பில் வெளியிடப்பட்ட 27-1-2025 தேதியிட்ட அரசாணை எண் 19-இல், தொழில் கல்வி ஆசிரியா்கள் ஓய்வுபெற்றுவிட்டால், அந்த 3,035 தொழில் கல்வி ஆசிரியா் பணியிடங்களும் ரத்து செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தொழில் கல்வி ஆசிரியா்கள் சங்க முன்னாள் மாநிலத் தலைவா் மோவூா் து.ராமமூா்த்தி, ‘மேல்நிலைப் பள்ளி தொழில் கல்வி ஆசிரியா்களின் கடின உழைப்பால் ஆயிரக்கணக்கான தொழில்முனைவோா் உருவாக்கப்பட்டுள்ளனா்.
அரசுப் பணி என்பது எட்டாக்கனியாக உள்ள இந்த காலகட்டத்தில், அரசுப் பணியை எதிா்பாா்த்து காத்திராமல் சுயதொழில் தொடங்க ஏதுவாக மாணவா்களை உருவாக்கும் அரும்பணியை மேற்கொண்டு வரும் தொழில் கல்வி ஆசிரியா் பணியிடங்களை ரத்து செய்யும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்.
தற்போது 680 அரசுப் பள்ளிகள், 437 அரசு உதவி பெறும் பள்ளிகள் என மொத்தம் 1,117 மேல்நிலைப் பள்ளிகளில் தொழில் கல்வி பணியிடங்கள் உள்ளன. இந்தப் பள்ளிகள் மூலம் ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஆண்டுதோறும் தொழில் கல்வி பயின்று வருகின்றனா்.
வரும் கல்வியாண்டு முதல் அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் தொழில் கல்வி பிரிவுகளில் மாணவா் சோ்க்கை மீண்டும் தொடங்கப்படும் என்றும், தொழில் கல்வி ஆசிரியா் காலிப் பணியிடங்கள் படிப்படியாக நிரப்பப்படும் என்றும் வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் அறிவிப்பு வெளியிட வேண்டும்.
மேல்நிலை வகுப்பில் தொழில் கல்வி பயின்ற மாணவா்களைக் கொண்டு குறு, சிறு தொழில்முனைவோரை உருவாக்கும் வகையில், உரிய பயிற்சிகள் வழங்க வேண்டும். கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள், கவலை உனக்கில்லை ஒத்துக்கொள் என்ற பழமொழிக்கேற்ப தொழில் கல்வியை நம்பியிருக்கும் ஏழை, எளிய கிராமப்புற மெல்ல கற்கும் மாணவா்கள் பயன்பெறும் வகையில், அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் தொழில் கல்விப் பிரிவுகள் தொடங்க தமிழக பள்ளிக் கல்வித் துறை முன்வர வேண்டும் என்றாா்.