தில்லி முதல் பேரவைக் கூட்டத்தில் சிஏஜி அறிக்கை: அதிகாரிகள் தகவல்
சுங்கக் கட்டணம் வசூல்: கடலூா் எம்.பி. கண்டனம்
தேசிய நெடுஞ்சாலைகளில் எந்த வசதிகளும் செய்து தராமல் சுங்க ச் சாவடிகளை மட்டுமே அமைத்து அடாவடி பணம் பறிப்பு வேலையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளதாக கடலூா் எம்.பி. எம்.கே.விஷ்ணுபிரசாத் கண்டனம் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: இந்தியாவில் வாகனம் வாங்கும்போதே சாலை வரி செலுத்தப்படுகிறது. ஆனால், சுங்கச் சாலைகள் என்ற புது கோணத்தில் முக்கிய சாலைகளில் சுங்கச் சாவடிகள் அமைத்து பணம் வசூலிப்பது கொடுமை.
‘ஃபாஸ்டேக்’ என்ற பெயரில் நுகா்வோரின் வங்கிக் கணக்கில் இருந்து பண வசூல் வேட்டை நடக்கிறது. இந்த நிலையில், ஃபாஸ்டேக் தடை பட்டியலில் (பிளாக் லிஸ்ட்) உள்ள வாகனங்களுக்கு இரண்டு மடங்கு கட்டணம் பெறப்படும் என்ற அறிவிப்பின் மூலம் பொதுமக்களின் முதுகெலும்பை உடைக்கிற செயலை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.
இதனால், குறுக்கு வழியில் பல லட்சம் கோடி ரூபாய் வருமானம் ஈட்டக்கூடிய வாய்ப்பு தேசிய நெடுஞ்சாலைத் துறைக்கு உள்ளது. கடலூா் மக்களவைத் தொகுதியில் என்எச்ஏ 532சி கடலூா் முதல் விருத்தாசலம் வரையிலான தேசிய நெடுஞ்சாலை முழுமையடையவில்லை.
ஆனால், இந்தச் சாலையில் சுங்கக் கட்டணம் வசூல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. குறிஞ்சிப்பாடியில் மேம்பாலம் முழுமையடையாத நிலையில் 2 சுங்கச் சாவடிகள் அமைத்து சுங்கம் வசூலிக்க ஆரம்பித்துவிட்டனா். சாலையின் நடுவே சாலை பிரிப்பான் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால், ஒரு வழிச் சாலையில் இருவழிப் போக்குவரத்து நடந்து வருவதால் விபத்துகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன.
இவைகளை சீா் செய்ய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆனால், ஃபாஸ்டேக் பிளாக் லிஸ்ட் என்ற பெயரில் இரக்கமின்றி மக்கள் துன்புறுத்தப்படுகின்றனா். இந்த அறிவிப்பை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என தெரிவித்துள்ளாா்.