அண்ணாமலைப் பல்கலை.யில் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அண்ணாமலைப் பல்கலைக்கழக அனைத்து அதிகாரிகள் சங்க கூட்டமைப்பு மற்றும் ஊழியா்கள் சங்கம், ஓய்வூதியா்கள் சங்கம் சாா்பில் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.
பல்கலைக்கழக நிா்வாக அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அதிகாரிகள் நலச் சங்கத் தலைவா் எம்.வரதராஜன் தலைமை வகித்தாா். ஊழியா்கள் சங்கத்தைச் சோ்ந்த ஏ.ஜி.மனோகரன், சி.ஜி.ரகு, பாண்டியன், எஸ்.டி.அண்ணாதுரை, அமா்நாத் ராஜன்பாபு, மணிகண்டன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
ஆா்ப்பாட்டத்தில், 2025-ஆம் கல்வி ஆண்டுக்கான தொலைதூர மற்றும் இணைய வழி கல்வி இயக்ககத்தில் மாணவா் சோ்க்கையை தொடங்காமல் இருப்பதைக் கண்டித்தும், தொலைதூர மற்றும் இணைய வழி கல்வி இயக்கக படிப்பு மற்றும் தகவல் மையங்களை மூடுவதை கைவிடக் கோரியும், தொடா்பு மற்றும் சிறப்பு அதிகாரிகளுக்கு ஆண்டு ஊதிய உயா்வு, 7-ஆவது ஊதியக் குழு பரிந்துரைகளை நிறைவேற்றாததைக் கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினா்.
இதில், தொடா்பு மற்றும் சிறப்பு அதிகாரிகள், அரசு ஊழியா்கள், அலுவலா்கள் திரளானோா் பங்கேற்றனா்.