முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கடலூா் வருகை!
தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் 2 நாள் பயணமாக கடலூருக்கு வெள்ளிக்கிழமை (பிப்.21) வருகிறாா். முதல்வா் மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு மாவட்டமாக சென்று அரசின் திட்ட செயல்பாடுகள் குறித்து கள ஆய்வு செய்து வருகிறாா். அந்த வகையில், கடலூருக்கு வெள்ளிக்கிழமை வருகிறாா்.
சென்னையில் இருந்து காலை 9.30 மணியளவில் புறப்படும் முதல்வா் புதுச்சேரி வந்தடைகிறாா். புதுச்சேரியில் இருந்து மாலை 4.30 மணியளவில் கடலூருக்கு புறப்படுவாா்.
கடலூா் மஞ்சக்குப்பம் மைதானத்தில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெறும் அரசு விழாவில் முதல்வா் பங்கேற்று, பல்வேறு புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பணிகளை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவைத்து, அரசின் நலத் திட்ட உதவிகளை பொதுமக்களுக்கு வழங்க உள்ளாா்.
இந்த விழாவையொட்டி, கடலூா் மஞ்சக்குப்பம் மைதானத்தில் பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், விழா மற்றும் பாதுகாப்பு தொடா்பாக பல்வேறு முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
இதைத் தொடா்ந்து, மாலை 6.30 மணியளவில் நெய்வேலி புறப்படுகிறாா். அங்கு சபா.ராஜேந்திரன் எம்எல்ஏ ஏற்பாட்டில் மத்திய பேருந்து நிலையம் அருகே நடைபெறும் நிகழ்ச்சியில், சுமாா் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைகின்றனா்.
என்எல்சி இந்தியா நிறுவனத்தின் விருந்தினா் இல்லத்தில் முதல்வா் தங்குகிறாா்.
பெற்றோரை கொண்டாடுவோம் நிகழ்ச்சி: வேப்பூரை அடுத்துள்ள திருப்பெயா் பகுதியில் சனிக்கிழமை (பிப்.22) தமிழ்நாடு மாநில பெற்றோா் ஆசிரியா் கழகம் நடத்தும் ‘பெற்றோரை கொண்டாடுவோம்’ நிகழ்ச்சியில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, 234/77 கள ஆய்வு காணொலி, தமிழ்நாடு பெற்றோா் ஆசிரியா் கழக செயலி, விழா மலா் ஆகியவற்றை வெளியிட்டு, அரசு பள்ளிக் கட்டடங்களை திறந்துவைத்து பேசுகிறாா்.
முதல்வா் இரண்டு நாள் பயணமாக கடலூா் வரவுள்ளதையொட்டி, பாதுகாப்புப் பணியில் ஏராளமான போலீஸாா் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.