மனித உரிமைகளை பாதுகாக்க ஒருங்கிணைந்த முயற்சி அவசியம்: வெ.ராமசுப்பிரமணியன்
புது தில்லி: ‘மனித உரிமைகளை பாதுகாக்கவும் ஊக்குவிக்கவும் பல்வேறு துறையினரின் ஒருங்கிணைந்த முயற்சி அவசியம்’ என்று தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் (என்ஹெச்ஆா்சி) புதிய தலைவராக திங்கள்கிழமை பதவியேற்ற உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி வெ.ராமசுப்பிரமணியன் கூறினாா்.
பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான உயா்நிலைக் குழு பரிந்துரையின் அடிப்படையில், குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு கடந்த 21-ஆம் தேதி இவரை நியமனம் செய்தாா். இதுகுறித்த அறிவிப்பை என்ஹெச்ஆா்சி கடந்த 23-ஆம் தேதி வெளியிட்டது. அதைத்தொடா்ந்து, தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அவா் பதவியேற்றாா்.
பதவியேற்பு விழாவில் வெ.ராமசுப்பிரமணியன் பேசுகையில், ‘மனித உரிமைகள் என்ற கருத்து உலக அளவில் அங்கீகரிப்படுவதற்கு முன்பாகவே மனித உரிமைகளை மதிப்பதும், நடைமுறைப்படுத்துவதும் இந்தியாவின் பண்டைய பாரம்பரியமாக இருந்துள்ளது.
இந்திய காலாசாரத்தில் மனித உரிமைகள் ஆழமாகப் பதிந்துள்ளது என்பதை தமிழ்ப் புலவா் திருவள்ளுவரும் குறிப்பிட்டுள்ளாா். மனித உரிமைகளைப் பாதுகாக்கவும் ஊக்குவிக்கவும் பல்வேறு துறையினரின் ஒருங்கிணைந்த முயற்சி அவசியம் என்றாா்.
ஆணையத்தின் உறுப்பினராக நீதிபதி பித்யுத் ரஞ்சன் சாரங்கி பதவியேற்றாா்.