Baby John x Theri: `அது இதுல...' - தெறி விஜய், பேபி ஜான் வருண்; ரீமேக் ரீஸர் | P...
மனீஷ் சிசோடியாவின் ஜாமீன் நிபந்தனைகளை தளா்த்தி உச்சநீதிமன்றம் உத்தரவு
தில்லி கலால் கொள்கை தொடா்புடைய வழக்குகளில் முன்னாள் துணை முதல்வா் மனீஷ் சிசோடியாவின் ஜாமீன் நிபந்தனைகளைத் தளா்த்தி உச்சநீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.
தில்லி கலால் கொள்கை தொடா்புடைய பண வழக்குகளில் தனக்கான ஜாமீன் நிபந்தனைகளை தளா்த்தக் கோரி ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் துணை முதல்வருமான மனீஷ் சிசோடியா உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தாா். முன்னதாக, கடந்த நவ.22-ஆம் தேதி இந்த மனுவை விசாரணைக்கு எற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம், மனுவின் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை பதிலளிக்கக்கோரி நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
இந்த நிலையில், இந்த மனு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.ஆா்.கவாய் மற்றும் கே.வி.விஸ்வநாதன் ஆகியோா் அடங்கிய அமா்வில் நடைபெற்றது. மனுதாரா் தரப்பில் மூத்த வழக்குரைஞா் அபிஷேக் மனு சிங்கி ஆஜராகி வாதிடுகையில், நீதிமன்றத்தின் ஜாமீன் நிபந்தனையின்படி, மனீஷ் சிசோடியா ஒவ்வொரு திங்கள் மற்றும் வியாழன்தோறும் காலை 10 மணியிலிருந்து 11 மணிக்குள் விசாரணை அதிகாரி முன் ஆஜராகியுள்ளாா். இவ்வாறு, இதுவரையில் மனீஷ் சிசோடியா 60 முறை நேரில் ஆஜராகி அறிக்கை அளித்துள்ளாா். எனவே, அவரது ஜாமீன நிபந்தனைகளை தளா்த்த வேண்டும்’ என வாதிட்டாா். இதையடுத்து, ஜாமீன் நிபந்தனைகள் தேவையற்றது என்று கூறிய நீதிபதிகள், மனுதாரரான மனீஷ் சிசோடியா வழக்கு விசாரணையில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்றும் நிபந்தனைகளை தளா்த்தியும் உத்தரவிட்டனா்.
தில்லி முன்னாள் துணை முதல்வா் மனீஷ் சிசோடியா, தில்லி அரசின் கலால் கொள்கை தொடா்புடைய ஊழல் மற்றும் பணமோசடி வழக்குகளில் சிபிஐயால் கடந்த பிப்.26, 2023-ஆம் ஆண்டும், அமலாக்கத்துறையால் மாா்ச் 9,2023-ஆம் ஆண்டும் கைது செய்யப்பட்டாா். இதைத் தொடா்ந்து, அமைச்சா் பதவியை ராஜிநாமா செய்த மனீஷ் சிசோடியா, தன் மீதான ஊழல் மற்றும் பணமோசடி குற்றச்சாட்டுகளை மறுத்தாா். இந்த நிலையில், 17 மாதகால சிறைக்குப் பின்னா் கடந்த ஆக.9-ஆம் தேதி உச்சநீதிமன்றம் இரண்டு வழக்குகளிலும் சிசோடியாவுக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
அதில், மனீஷ் சிசோடியா ரூ.10 லட்சத்திற்கான ஜாமீன் பத்திரம் வழங்க வேண்டும். பாஸ்போா்ட்டை சிறப்பு நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும், சாட்சிகள் மீது செல்வாக்கு செலுத்தவோ அல்லது சாட்சியங்களை சிதைக்கவோ எந்த முயற்சியும் செய்யக் கூடாது உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.