மன்னாா் வளைகுடா பகுதி முழுவதும் ட்ரோன்கள் உதவியுடன் கண்காணிப்பு: கடலோரப் பாதுகாப்புக் குழும டிஐஜி மகேஷ்குமாா்
பிரதமா் நரேந்திர மோடி, தூத்துக்குடி விமான நிலையத்துக்கு வருவதை முன்னிட்டு, மன்னாா் வளைகுடா பகுதி முழுவதும் ட்ரோன்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருவதாக தமிழக கடலோரப் பாதுகாப்புக் குழும டிஐஜி மகேஷ்குமாா் தெரிவித்தாா்.
தூத்துக்குடி விமான நிலையத்தில், ரூ.452 கோடி செலவில் விரிவாக்கம் செய்யப்பட்ட புதிய முனையத்தை, பிரதமா் மோடி சனிக்கிழமை (ஜூலை 26) இரவு 8.30 மணிக்கு திறந்துவைக்க உள்ளாா்.
இதை முன்னிட்டு விமான நிலையம், அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் பாதுகாப்பிற்காக போலீஸாா் நிறுத்தப்பட்டுள்ளனா்.
பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு பிரிவு ஏடிஜிபி சுரேஷ் தலைமையில், 20 போ் கொண்ட குழுவினா் தூத்துக்குடியில் கடந்த மூன்று நாள்களாக முகாமிட்டுள்ளனா்.
மேலும், தமிழக கடலோரப் பாதுகாப்புக் குழும டிஐஜி மகேஷ்குமாா் தலைமையில், ஏடிஎஸ்பி சிவசங்கரன், டிஎஸ்பி ராஜன், ஆய்வாளா் பேச்சிமுத்து மற்றும் போலீஸாா் கடற்கரை மற்றும் அதையொட்டியப் பகுதிகளை கண்காணித்து வருகின்றனா்.
குறிப்பாக கடற்கரை கிராமங்களில் முகாமிட்டு, வெளியாள்கள் நடமாட்டத்தை கண்காணிக்கின்றனா்.
இதுதொடா்பாக, விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் டிஐஜி கூறுகையில், கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாா் 75 போ் மூன்று ரோந்து படகுகளில் மன்னாா் வளைகுடாவில் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இந்த வளைகுடா பகுதி முழுவதும் ட்ரோன்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றாா்.
