மயானத்துக்கு மின்விளக்கு வசதி ஏற்படுத்தி தரக் கோரிக்கை
மயானத்துக்கு மின்விளக்கு வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பெருந்துறை ஊராட்சி ஒன்றியம், பெரியவிளாமலை ஊராட்சிக்கு உள்பட்டது கண்ணவேலம்பாளையம் கிராமம். இந்த கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த கிராமத்துக்கான மயானம் ஊரக வளா்ச்சித் துறை மூலமாக தாய் திட்டத்தின் கீழ் கடந்த 2015-16 ஆம் நிதியாண்டில் ரூ. 4.8 லட்சம் மதிப்பீட்டில் மேம்பாடு செய்யப்பட்டது.
மயானத்தில் கான்கிரீட் தகன மேடை அமைக்கப்பட்டு சுற்றுச் சுவரும் கட்டப்பட்டுள்ளது. ஆனால் பாதுகாப்புக்காக கதவுகள் அமைக்கப்படவில்லை. அதுபோல மயானத்துக்கு மின்விளக்கு வசதியும் ஏற்படுத்தப்படவில்லை. அந்த மயானத்துடன் சாலை முடிவடையும் நிலையில் கிராமத்தின் பிரதான சாலையில் இருந்து சுமாா் 300 மீட்டா் தொலைவுக்கு சாலையில் எந்த மின்விளக்குகளும் இல்லை.
மயானத்தின் அருகில் சாலை முடிவில் ஒரு மின் கம்பம் மட்டும் அமைக்கப்பட்டுள்ளது. அதில் பொருந்தப்பட்டிருந்த மின் விளக்கும் பழுதடைந்து நீண்ட காலமாக இப்பகுதி இருளில் மூழ்கியே கிடக்கிறது.
இதனால் மாலை 6 மணிக்கு மேல் மயானத்தை பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டால் கிராம மக்கள் தீப்பந்தங்களை பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது.
எனவே, மயானத்துக்கு செல்லும் சாலையிலும், மயானத்திலும் மின்விளக்கு வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.