சென்னைக்கு திரும்பும் மக்கள்: ஆம்னி பேருந்துகள் கட்டணம் உயா்வு
``மரம் பேசும், மரத்தோடு பேசலாம்..'' - மறுநடவு மூலம் 141 மரங்களுக்கு மறுவாழ்வு கொடுத்தவர் உருக்கம்!
தஞ்சாவூர்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செங்கிப்பட்டி அருகே ஒரு கிலோ மீட்டர் தொலைவில் புதிய மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக சாலையோரத்தில் இருந்த நூற்றுக்கு மேற்பட்ட மரங்கள் வெட்டப்பட இருந்தன.
இந்த நிலையில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில், வெட்டப்பட இருந்த மரங்களை வேறு இடத்தில் நட்டு மறு வாழ்வு அளிக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அனைத்து உதவிகளையும் செய்து கொடுக்க, கோவையை சேர்ந்த கிரீன் கேர் அமைப்பின் தலைவர் சையத் காட்டுவா, சாலையோரத்தில் இருந்த மரங்களுக்கு எந்த வகை பாதிப்பும் ஏற்படாமல் வேருடன் எடுத்து வேறு இடத்தில் நட்டு வருகிறார். இதன் மூலம் 141 மரங்கள் மறு வாழ்வு பெற்றுள்ளன. மரங்களுக்கு மறு வாழ்வு அளிக்க அதிகாரிகள் எடுத்த முயற்சியை பலரும் பாராட்டுகின்றனர்.
இது குறித்து சையத் காட்டுவாவிடம் பேசினோம். அவர் கூறுகையில், "தஞ்சாவூர், செங்கிப்பட்டி அருகே உள்ள அய்யாசமிப்பட்டி பகுதியில் புதிய மேம்பாலம் அமைக்கும் பணி தொடங்க உள்ளது. அப்பகுதியில் சாலையோரத்தில் புங்கன், வேம்பு, வாகை, பூவரசன் உள்ளிட்ட 141 மரங்கள் இருந்தன. சுமார் 15 வயதுடைய இந்த மரங்களை இந்திய தேசிய நெடுஞ்சாலை துறையால் பராமரிக்கப்பட்டு வந்தன.

இந்த நிலையில் மேம்பாலம் அமைப்பதற்காக அந்த மரங்கள் வெட்டப்பட இருந்தன. இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம், இந்த மரங்களை வேருடன் பிடிங்கி வேறு இடத்தில் நட்டு மறுவாழ்வு அளிக்க முடிவும் செய்து எங்களுடைய கிரீன் கேர் அமைப்பிற்கு அந்த பணியை வழங்கி அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்தனர்.
இதையடுத்து மரங்களை எடுத்து அதே சாலையில் வேறு இடத்தில் நடவு செய்து மறு வாழ்வு அளிக்கும் பணியில் இறங்கினோம்.
முதல்ல மரத்தின் ஆரோக்கியம், அந்த மரத்தை எடுத்து நடவு செய்ய உள்ள இடத்தின் மண்ணோட தரம் ஆகிவற்றை தெரிந்து கொண்டோம்.
பின்னர், மரத்தின் கிளைகளை காவாத்து செய்து, கிளையின் நுனி பகுதியில் சாணம் தடவி கிளையை சணல் சாக்கில் மூடி சணலால் கட்டினோம்.
வெட்டப்பட்ட கிளைகள் வழியாக உயிர் சத்துக்கள் வெளியேறாமல் இருக்கவும், வேகமாக துளிர்க்கவும் இம்முறையை கையாண்டோம்.

பின்னர் மரத்தின் அடிப்பகுதியை ஒட்டி மூணுக்கு மூணு அளவில் குழி எடுத்து கிரேன் மூலம் மரத்துக்கு எந்த காயமும் படாமல் வேருடன் எடுத்து லாரி அல்லது கிரேனில் எடுத்துச் சென்றோம். முன்னதாக மரம் நடவு செய்கின்ற இடத்தில் பெரிய மரமாக இருந்தால் பத்துக்கு பத்து, சிறிய மரமாக இருந்தால் 6-க்கு 6 அளவில் குழி எடுத்தோம். இதையடுத்து மரம் எடுத்த இடத்திலிருந்து தாய் மண்ணை எடுத்து வந்து குழியில் போட்டோம். பிறகு வேப்பம் புண்ணாக்கு, தென்னை நார் கழிவு, மண்புழு உரம் ஆகியவையும் குழியில் போட்டோம்.
இதைதொடர்ந்து தண்ணீர் ஊற்றி குழியை கொல கொலவெனு சேராக்கினோம். அடி வேர் எளிதாக மண்ணுக்குள் இறங்க வேண்டும் என்பதற்காக இதனை செய்தோம். பின்னர் மரத்தை எடுத்து குழியில் வைத்து நடவு செய்து அடிப்பகுதியில் மண்ணை நிரப்பினோம்.
இதற்காக மரம் இருந்த அந்த இடத்திலிருந்து தாய் மண்ணை லாரியில் எடுத்து வந்தோம். மரத்துக்கும், தாய் மண்ணுக்குமான உறவு எப்போதும் தொடர வேண்டும் என்பதற்காக இதை செய்தோம்.

அந்த சமயத்தில் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கையில் மண்ணை கொடுத்து மரத்தை பராமரித்து பாதுகாப்போம் என்கிற உறுதி மொழியை எடுக்க வச்சி மண்ணை போட வைத்தோம்.
நடவு செய்யப்பட்ட மரங்களை காய்ச்சலும், பாய்ச்சலுமாக ஒரு நாள் விட்டு ஒரு நாள் தண்ணீர் ஊற்றி குளிக்க வச்சோம். இதனால் சீக்கிரம் மரம் துளிர்த்து வளரும். சுமார் 90 நாள்களுக்குள் பழைய நிலைக்கு வந்து விடும். எங்களுடைய இந்த செயல் மூலம் 141 மரங்கள் மறு வாழ்வு பெற்றுள்ளன.
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் அதிகாரிகள் மரங்களை காப்பதற்கு காட்டும் அக்கறை தான் இந்த மரங்களின் மறு வாழ்வுக்கு மிக முக்கிய காரணம். களத்தில் எங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அதிகாரிகள் செய்து தந்தனர்.
இதே போல் வள்ளியூர், காவல்கிணறு, கங்கை கொண்டான் ஆகிய ஊரிகளிலும் மரங்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் பணி நடைபெறுகிறது. மரங்களை பாதுகாத்தல், மரங்களை வெட்டாமல் தடுத்தல், மரங்கள் மறு நடவு செய்தல் போன்ற பணிகளை கிரீன் கேர் அமைப்பு கடந்த 25 வருடங்களாக செய்து வருகிறது.

தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல மாநிலங்களில் இப்பணிகளை மேற்கொண்டு வருகிறோம். திருப்பத்தூரில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்காக அந்த இடத்தில் இருந்த 250 மரங்களை எடுத்து கேம்ப் ஆபிஸில் உள்ள 16 ஏக்கர் இடத்தில் மறு நடவு செய்தோம். தற்போது அந்த மரங்கள் வளர்ந்து செழிப்பாக நல்ல நிலையில் இருக்கிறது.
மரம் பேசும், மரத்தோடு மனிதன் பேசலாம். மரம் தான் நமக்கான உயிர். மரம் காற்று மூலம் மூச்சி கொடுத்து நம்மை வாழ செய்கிறது. நாம் வாழ்வதற்கு முக்கியமானது மரம். அப்படிப்பட்ட மரங்களை அழிக்காமல் காக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமையும் கூட. மரங்களை எடுத்து வேறு இடத்தில் நடவு செய்த ஒவ்வொரு நாளும் அப்பகுதியில் மழை பெய்தது குறிப்பிடத்தக்கது. மரம் பூமியை மட்டுமல்ல மனிதனின் வாழ்க்கையையும் பசுமையாக்கும் எனவே மரம் வளர்ப்போம், மரம் காப்போம்" என்றார்.