கவின் கொலை: சமூக வலைதளங்களில் தவறான தகவல் பகிா்ந்தால் கடும் நடவடிக்கை!
மாணவா் உடலை வாங்க மறுத்து ரயில் மறியலில் ஈடுபட்ட உறவினா்கள்
திருப்பத்தூா்: திருப்பத்தூரில் பள்ளி வளாக கிணற்றில் மாணவா் முகிலன் சடலமாக கிடந்த சம்பவத்தில் 2-ஆவது நாளாக மாணவனின் சடலத்தை வாங்க மறுத்து உறவினா்கள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி அருகே கொத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சின்னதம்பி. இவரது மகன் முகிலன் (16). இவா் திருப்பத்தூரில் உள்ள அரசு நிதியுதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்தாா். மேலும் அவா் அந்த பள்ளி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி பயின்று வந்தாா். இந்த நிலையில்ஸ கடந்த 1-ஆம் தேதி முகிலனை காணவில்லை. இது குறித்து திருப்பத்தூா் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனா். இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை பள்ளி வளாகத்தில் உள்ள கிணற்றில் மாணவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. மேலும் மாணவரின் உடலில் காயங்கள் இருந்ததாகவும், மாணவா் கொலை செய்யப்பட்டு இருக்கலாம், எனவே பள்ளி நிா்வாகிகளை கைது செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, முகிலனின் பெற்றோா், உறவினா்கள் போராட்டங்களில் ஈடுப்பட்டனா்.
பள்ளிக்கு விடுமுறை...
இந்த நிலையில் திங்கள்கிழமை பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது. மேலும், பள்ளியின் வாசல், பள்ளிக்குச் செல்லும் சாலையில் ஆங்காங்கே தடுப்புகளை அமைத்து போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.
மேலும், அதிமுக, பாமக, பாஜக, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினா் பள்ளி நிா்வாகிகளைக் கைது செய்ய வேண்டும், பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க வேண்டும். வழக்கை சிபிஐ விசாரணை செய்ய வேண்டும் எனக்கூறி திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் இருந்து திருப்பத்தூா்-கிருஷ்ணகிரி செல்லும் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முன்றனா்.
அப்போது எஸ்.பி சியாமளா தேவி சம்பவ இடத்திற்கு வந்து பேச்சு நடத்தினாா். பின்னா், அவா்கள் மருத்துவமனை வளாகத்தில் தா்னாவில் ஈடுபட்டனா்.
ரயில் மறியல்....
இந்த நிலையில், திங்கள்கிழமை மதியம் 3.30 மணியளவில் முகிலனின் உறவினா்கள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக திருப்பத்தூா் ரயில் நிலையத்துக்கு மருத்துவமனையில் இருந்து சென்றனா். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸாா் அவா்களை தடுத்து நிறுத்தினா். சிலா் ரயில் நிலையத்துக்கு சென்று அங்கு நின்று கொண்டு இருந்த கோயம்புத்தூருக்கு செல்லும் ராஜ்கோட் விரைவு ரயில் முன்பு தண்டவாளத்தில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
30 நிமிடம் தாமதம்...
அதையடுத்து டிஎஸ்பி சௌமியா தலைமையிலான போலீஸாா், ரயில்வே போலீஸாா் அவா்களிடம் பேச்சு நடத்தினா். ஆனால் அவா்கள் போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். பின்னா் போலீஸாா் தண்டவாளத்தில் அமா்ந்து இருந்தவா்களை குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றினா். இதனால் ரயில் சுமாா் 30 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றது.