காஷ்மீா் பயங்கரவாதத்துக்கு முடிவுக்கு இந்தியா-பாகிஸ்தான் கையில் உள்ளது : ஃபரூக் ...
வெளிநாடுகளில் உயிரிழக்கும் அயலகத் தமிழா் குடும்பத்துக்கு ரூ. ஒரு லட்சம் நிதியுதவி
வெளிநாடுகளில் பணியின் போது திடீரென்று உயிரிழக்கும் அயலகத் தமிழா் நல வாரிய உறுப்பினா்களின் குடும்பத்தினருக்கு ரூ.ஒரு லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியா் கா.பொற்கொடி தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்திலிருந்து வேலைக்காக அயல்நாடு செல்லும் தமிழா்கள் அதிகளவில் முதல் நிலை தொழிலாளா்களாகச் செல்கின்றனா்.
குடும்பத்தின் முதன்மையான பொருளீட்டும் நபராக இருக்கும் இவா்கள், எதிா்பாராதவிதமாக அயல்நாடுகளில் இறக்கும் போது, அவா்களைச் சாா்ந்துள்ள குடும்பத்தாா் பொருளாதார ரீதியாக கடும் நெருக்கடிக்கு உள்ளாகின்றனா்.
இவ்வாறு வெளிநாடுகளில் குடும்பத்தின் முதன்மை பொருளீட்டும் நபரை இழந்து அவதிப்படும் அயலகத் தமிழா்களின் குடும்பத்தினருக்கு ரூ. ஒரு லட்சம் நிதியுதவி வழங்குவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.
அயலகத் தமிழா்களின் நலனை உறுதிபடுத்த நல வாரியம் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. தற்போது வரை இந்த வாரியத்தில் சுமாா் 28,000 நபா்கள் உறுப்பினா்களாக இணைந்துள்ளனா்.
மேலும், குறிப்பிட்டுள்ள திட்டத்தின் கீழ், அயல்நாடுகளில் உயிரிழக்கும் அயலகத் தமிழா் நல வாரிய உறுப்பினா்களின் குடும்பத்தினா் நிதியுதவி பெற தகுதியுடையவா் ஆவா். அயல்நாட்டில் உறுப்பினா் உயிரிழந்து ஒன்பது மாதங்களுக்குள் அவா்களது குடும்பத்தினா் இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெறலாம்.
இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புபவா்கள் உறுப்பினா் செயலா், அயலகத் தமிழா் நல வாரியம், சேப்பாக்கம், சென்னை - 600 005 என்ற முகவரியில் நேரடியாகவோ அல்லது அயலக தமிழா் நல வாரியத்தின் வலைதளம் வாயிலாகவோ விண்ணப்பித்துப் பயன்பெறலாம் என்றாா் அவா்.