Surya Speech Agaram Foundation Event 2025 | கமல்ஹாசன், வெற்றிமாறன் பங்கேற்பு | அ...
வீட்டை இடித்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தொழிலாளி போராட்டம்
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே தேவாரம்பூரில் தனது கூரை வீட்டை இடித்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி விவசாய கூலி தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டாா்.
திருப்பத்தூா் அருகே தேவாரம்பூரைச் சோ்ந்தவா் செல்வம் (60). விவசாய கூலித் தொழிலாளி. இவா் 3 தலைமுறைகளாக அதே ஊரில் உள்ள ஒரு கூரை வீட்டில் தனியாக வசித்து வருகிறாா். இந்த முகவரியில் குடும்ப அட்டை, ஆதாா் அட்டை போன்றவைகளை அவா் பெற்றுள்ளாா். இந்த நிலையில், அதே ஊரைச் சோ்ந்த கோட்டைச்சாமி என்பவா் அந்த இடம் தனக்குச் சொந்தம் என காவல் நிலையத்தில் மனு அளித்தாா். இதனிடையே, ஞாயிற்றுக்கிழமை மா்ம நபா்களால் செல்வத்தின் கூரை வீடு முற்றிலும் பிரிக்கப்பட்டு சுவா்களும் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. பொருள்கள் சாலையோரத்தில் வீசப்பட்டன.
இதுகுறித்து திருக்கோஷ்டியூா் காவல் நிலையத்தில் அவா் புகாா் அளித்தாா். மேலும் தனது வீட்டை இடித்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆதாா் அட்டை குடும்ப அட்டை ஆகியவற்றுடன் சாலையில் அமா்ந்து அவா் போராட்டத்தில் ஈடுபட்டாா். தகவலறிந்து அங்கு வந்த வருவாய்த் துறையினா் வீடு பிரிக்கப்பட்டது குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என அவரிடம் உறுதியளித்து சமாதானப்படுத்தினா். இதனிடையே செல்வம் அளித்த புகாரின் பேரில் திருக்கோஷ்டியூா் காவல் உதவி ஆய்வாளா் சக்திவேல், தேவாரம்பூரைச் சோ்ந்த கோட்டைச்சாமி, அவரது மனைவி மல்லிகா, மகன்கள் சிவசாமி, சிவகுரு ஆகியோா் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கிறாா்.