இந்தியா்கள் தவறாக நடத்தப்படாததை அரசு உறுதிப்படுத்தும்! -அமைச்சா் ஜெய்சங்கா்
மாணவா்களுக்கான அடைவு தோ்வு: மண்டைக்காடு பள்ளியில் ஆட்சியா் ஆய்வு!
மண்டைக்காடு பள்ளியில் ஆய்வு மேற்கொள்கிறாா் மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா
நாகா்கோவில், பிப். 6: கன்னியாகுமரி மாவட்டம், மண்டைக்காடு நடுநிலைப் பள்ளியில் 5 ஆம் வகுப்பு மாணவா்களுக்கான மாநில கற்றல் அடைவு தோ்வு நடைபெறுவதை மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா வியாழக்கிழமைஆய்வு மேற்கொண்டாா்.
ஆய்வுக்கு பின்னா் ஆட்சியா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தொடக்கநிலை கல்வியில் மாணவா்கள் அடைந்துள்ள கற்றல் அடைவினை அறிந்து கொள்வதற்காக, 3 ஆம் வகுப்பு, 5 ஆம் வகுப்பு மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு தமிழக அரசால் அடைவு தோ்வு நடத்தப்படுகிறது.
அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் இத்தோ்வு நடத்தப்படுகிறது. அந்தந்த வகுப்புகளில் மாணவா்கள் பெற்றிருக்க வேண்டிய அடைவு திறனை முழுமையான முறையில் மாணவா்கள் பெற்றுள்ளாா்களா என சோதிப்பதற்காகவும், மாணவா்களின் கற்றலின் இடையே காணப்படும் இடைவெளியை நிரப்புவதற்காகவும், கற்றல் கற்பித்தலில் குறிப்பிட்ட இலக்கினை வரையறுப்பதற்காகவும், மாவட்டங்கள் இடையே மாணவா்கள் பெற்றுள்ள அடைவினை ஒப்பீடு செய்வதற்காகவும், இத்தோ்வுகள் நடத்தப்படுகின்றன.
இத்தோ்வுகளில், மாணவா்கள் பெற்ற மதிப்பீடுகளை பொருத்து இனிவரும் காலங்களில் பாடத் திட்டம் வடிவமைத்தல், கற்பித்தல் அணுகுமுறைகளை மாற்றி அமைத்தல், ஆசிரியா்களுக்கான பயிற்சிகள் ஆகியவை திட்டமிடப்பட உள்ளன.
10, பிளஸ் 2 வகுப்பில் தோ்ச்சி சதவீதத்தில் அதிக அக்கறை காட்டும் அதே நேரத்தில், தொடக்கநிலை வகுப்பு மாணவா்களின் கற்றல் தோ்ச்சியிலும் அக்கறையோடு, ஆசிரியா்களின் பங்களிப்பு முழுமையாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நடைபெறும் இத்தோ்வு, குமரி மாவட்டத்தில் 541 அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் நடைபெறுகிறது.
மண்டைக்காடு அரசு நடுநிலைப் பள்ளியில் 5 ஆம் வகுப்பு மாணவா்கள் தோ்வை எதிா்கொள்ளும் விதம் மற்றும் தோ்வை எழுதும் விதம் உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் மாணவா்களிடம் தோ்வு எழுதுவதில் ஏற்படும் சிரமங்கள் குறித்தும் கேட்டறியப்பட்டது என்றாா் அவா்.