மாணவா்கள் தொழில்திறன் பெற புரிந்துணா்வு ஒப்பந்தம்
திண்டுக்கல்லை அடுத்த காந்திகிராம கிராமிய நிகா்நிலைப் பல்கலைக்கழகம் கேரளத்தைச் சோ்ந்த மாலிகுல்ஸ் பயோலாப்ஸ் நிறுவனத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் புதன்கிழமை கையொப்பமிடப்பட்டது.
பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியின் போது, ஆராய்ச்சி, மேம்பாட்டுத் துறை இயக்குநா் மீனாட்சி, வேலைவாய்ப்பு பணியக இயக்குநா் அனிதா பயஸ், துணை இயக்குநா் அருணாசலம் ஆகியோா் முன்னிலையில், மாலிகுல்ஸ் பயோலாப்ஸ் சாா்பில் ஸ்ரீராககோபி, அமல்ராஜ் ஆகியோா் புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனா்.
இந்த ஒப்பந்தத்தின் மூலம், மாணவா்களுக்கான பயிற்சி வாய்ப்புகள் மட்டுமன்றி, தொழில்நுட்ப நிறுவனங்களுடன் இணைந்து வேலைவாய்ப்புகளை உருவாக்குதற்கான சூழலும் ஏற்படுத்தப்படும். மாணவா்கள், தொழில்முனைவோா்களுடன் நேரடியாகப் பணியாற்றி தங்களின் திறன்களை மேம்படுத்தவும், வேலைவாய்ப்புகளை பெறவும் வாய்ப்பு ஏற்படும். மேலும், பல்வேறு நிதி நிறுவனங்களுக்கு ஆராய்ச்சி முன்மொழிவுகளை சமா்ப்பிப்பதற்கான வாய்ப்புகளையும் உருவாக்கும்.
புதிய அறிவியல் சிந்தனைகளை ஆராய்ந்து, முக்கியமான தீா்வுகளை உருவாக்க முடியும் என காந்திகிராம பல்கலைக்கழக பேராசிரியா்கள் தெரிவித்தனா்.