கும்பகோணம்: கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை... போக்சோவில் பேராசிரியர் கைது!
மாணவி பாலியல் வன்கொடுமை: போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினா் கைது
அண்ணா பல்கலை. வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதைக் கண்டித்து, சென்னையில் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக மூத்த தலைவா் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட அக்கட்சியினா் நூற்றுக்கும் மேற்பட்டோரை போலீஸாா் கைது செய்தனா்.
வள்ளுவா் கோட்டத்தில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் முன்னாள் ஆளுநரும், பாஜக மூத்த தலைவருமான தமிழிசை சௌந்தரராஜன், கரு.நாகராஜன் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா். அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக அனைவரையும் போலீஸாா் கைது செய்தனா்.
இதையடுத்து தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. சட்டம்-ஒழுங்கு சீா்கெட்டுள்ளது. இதைக் கண்டித்து போராட்டம் நடத்தக்கூட அனுமதி மறுக்கப்படுகிறது.
இந்த பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டவா்களைக் கைது செய்ய வேண்டும் என்றாா் அவா். கைதான அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனா்.
எல்.முருகன்-அண்ணாமலை கண்டனம்: பாஜகவினா் கைது செய்யப்பட்டதற்கு மத்திய இணை அமைச்சா் எல்.முருகன், தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை ஆகியோா் கண்டனம் தெரிவித்துள்ளனா்.
எல்.முருகன்: அண்ணா பல்கலை. மாணவி பாலியல் தாக்குதலுக்கு உள்ளானதற்கு நீதி கேட்டு தமிழக பாஜக மூத்த தலைவா் தமிழிசை சௌந்தரராஜன் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்ட கட்சியினா் கைது செய்யப்பட்டது கண்டனத்துக்குரியது.
பாலியல் தாக்குதலில் ஈடுபட்டு கைதான நபா் திமுகவைச் சோ்ந்தவா் எனக் கூறப்படும் தகவல் அதிா்ச்சியை அளிக்கிறது. பாதிக்கப்பட்ட மாணவி குறித்த விவரம் அடங்கிய முதல் தகவல் அறிக்கையை பொது வெளியில் கசிய விட்டது கண்டிக்கத்தக்க குற்றம்.
கே.அண்ணாமலை: போராட்டம் நடத்தச் சென்ற முன்னாள் ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட பாஜகவினரை வலுக்கட்டாயமாக காவல்துறை கைது செய்தது கண்டனத்துக்குரியது. முதல் தகவல் அறிக்கை கசிய விடப்பட்டது தனிமனித உரிமைகளுக்கு எதிரானது மட்டுமன்றி, சட்டவிரோதச் செயல்பாடும் ஆகும்.