உங்கள் கையில் ரூபாய் நோட்டுகள் இருக்கிறதா? இதைத் தெரிந்துகொள்வது அவசியம்!
மாதம் ரூ.24.5 லட்சம் வாடகை; ஆமிர் கானும் குடியேறும் வாடகை வீடு - என்ன ஸ்பெஷல்?
பாலிவுட் நடிகர் ஷாருக் கானின் மும்பை இல்லம் இப்போது கூடுதல் மாடிகளுடன் நீட்டித்து புதுப்பித்து கட்டப்பட்டு வருகிறது. இதையடுத்து ஷாருக்கான் அருகில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருக்கிறார். இதேபோன்று நடிகர் ஆமிர் கானும் மும்பை பாந்த்ரா பகுதியில்தான் வசித்து வருகிறார். அவர் தற்போது இருக்கும் கட்டடம் மிகவும் பழையதாகிவிட்டது. விர்கோ ஹவுசிங் சொசைட்டி என்ற அக்கட்டடத்தில் ஆமிர் கான் குடும்பத்திற்கு 12 வீடுகள் இருக்கின்றன. இக்கட்டடத்தில் ஆமிர் கான் ஒட்டுமொத்த குடும்பமும் வசிக்கிறது. இக்கட்டடத்தை இடித்துவிட்டு புதிய அடுக்குமாடி கட்டடம் கட்டப்பட இருக்கிறது. இதில் கடற்கரையை நோக்கி அடுக்கு மாடி சொகுசு வீடுகள் கட்டப்பட இருக்கிறது. இதில் ஒரு சதுர அடி ஒரு லட்சம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு வீடு ரூ.100 கோடி வரை இக்கட்டடத்தில் விற்பனையாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்காக தனியார் பில்டர் ஒருவருடன் ஹவுசிங் சொசைட்டி நிர்வாகிகள் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளனர். இதையடுத்து விர்கோ கட்டடம் விரைவில் இடிக்கப்பட இருக்கிறது. எனவே ஆமிர் கான் தற்காலிகமாக புதிய ஆடம்பர சொகுசு அடுக்குமாடி கட்டடத்தில் வீடு வாடகைக்கு எடுத்துள்ளார். வில்னோமோ என்ற அக்கட்டடத்தில் 4 வீடுகளை ஆமிர் கான் வாடகைக்கு எடுத்து இருக்கிறார். அதாவது 2030ம் ஆண்டு மே மாதம் வரை அந்த வீட்டை குத்தகைக்கு எடுத்துள்ளார். நான்கு வீட்டிற்கும் சேர்த்து ரூ.1.46 கோடி டெபாசிட்டாகக் கொடுத்திருக்கிறார். புதிய வீடுகளுக்கான வாடகை ஒப்பந்தம் கடந்த மே மாதத்தில் இருந்தே தொடங்குகிறது.
நான்கு வீடுகளுக்கு சேர்த்து மாதம் ரூ.24.5 லட்சம் வாடகையாக செலுத்துகிறார். ஒவ்வொரு ஆண்டும் வாடகை 5 சதவிகிதம் அதிகரிக்கும் என்று வாடகை ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. வில்னோமோ கட்டடம் தற்போது ஷாருக் கான் வாடகைக்கு வசிக்கும் பூஜாகாசா கட்டடத்தில் இருந்து 750 மீட்டர் தூரத்தில் இருக்கிறது.
பாந்த்ரா மேற்கு பகுதி பாலிவுட் பிரபலங்களின் மையமாக விளங்குகிறது. ஆமிர் கான் மற்றும் ஷாருக் கான் தவிர, சல்மான் கான், ஜாவேத் அக்தர், கரீனா கபூர் கான், சைஃப் அலி கான், க்ரிதி சனோன், ரன்பீர் கபூர், ஆலியா பட் மற்றும் மூத்த நடிகை ரேகா போன்ற பிரபலங்களும் இங்கு வசிக்கின்றனர். பாலிவுட் தம்பதிகளான தீபிகா படுகோனே மற்றும் ரன்வீர் சிங் ஆகியோரும் விரைவில் அதே பகுதியில் புதிதாக வாங்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் குடியேற இருக்கின்றனர். பாந்த்ரா மேற்கு பகுதி கடற்கரையையொட்டி இருக்கிறது. இங்கு அதிக அளவில் நைட் கிளப்களும் இருக்கிறது. பாந்த்ராவில் ஷாருக் கான் மனைவி உணவகம் ஒன்றையும் நடத்துகிறார்.
ஆமிர் கான் கடைசியாக சிதாரே ஜமீன் பர் படத்தில் நடித்தார், இது இந்தியாவில் ரூ.165 கோடிக்கு மேல் சம்பாதித்தது. ஆர்.எஸ்.பிரசன்னா இயக்கிய இப்படத்தில் ஜெனிலியா தேஷ்முக் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்தார். அடுத்ததாக, ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் இந்திய சினிமாவின் தந்தை தாதாசாகேப் பால்கேயின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட இருக்கும் படத்தில் ஆமிர் கான் நடிக்க இருக்கிறார். மேலும் சன்னி தியோல் முக்கிய வேடத்தில் நடிக்கும் லாகூர் 1947 படத்தையும் ஆமிர் தயாரித்து வருகிறார். இப்படத்தை ராஜ்குமார் சந்தோஷி இயக்குகிறார். மேலும் நடிகர் ரஜினிகாந்த்தின் கூலி படத்திலும் கெளரவ வேடத்தில் நடித்திருக்கிறார்.