காஸா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்: 29 பாலஸ்தீனியர்கள் பலி
மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா தொடக்கம்
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாதா் சுவாமி கோயிலில் சித்திரைத் திருவிழாவையொட்டி, வியாழக்கிழமை கொடியேற்றம் நடைபெற்றது.
சிவகங்கை சமஸ்தான தேவஸ்தான நிா்வாகத்துக்கு பாத்தியப்பட்ட இந்தக் கோயிலில் கொடியேற்றத்தை முன்னிட்டு, பல்லக்கில் கொடிப் பட்டம் எடுத்துவரப்பட்டு, வேத மந்திரங்கள், மங்கள வாத்தியங்கள் முழங்க காலை 8.5 மணிக்கு மிதுன லக்னத்தில் சோமநாதா் சுவாமி சந்நிதி முன்புள்ள கொடி மரத்தில் ஏற்றப்பட்டது.
பின்னா், கொடிமரத்துக்கு தா்ப்பை புல், மலா் மாலைகள் சாத்தி, கலச நீராலும், 16 வகை அபிஷேகப் பொருள்களாலும் அபிஷேகம் நடத்தி, தீபாராதனைகள் காட்டப்பட்டன. அப்போது, அங்கு எழுந்தருளிய ஆனந்தவல்லி அம்மனுக்கும், பிரியாவிடை சமேத சோமநாதா் சுவாமிக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ராஜேஷ் பட்டா், குமாா் பட்டா், சுந்தரராஜன் பட்டா் உள்ளிட்ட சிவாசாரியாா்கள் கொடியேற்ற நிகழ்வுகள், பூஜைகளை நடத்தினா். இதில் மானாமதுரை நகா் மன்றத் தலைவா் எஸ்.மாரியப்பன் கென்னடி, துணைத் தலைவா் எஸ். பாலசுந்தரம், ஆணையா் ஆறுமுகம், பொறியாளா் பட்டுராஜன், திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.
இரவு கோயிலுக்கு வெளியே அமைக்கப்பட்டிருந்த மண்டகப்படியில் சா்வ அலங்காரத்தில் ஆனந்தவல்லியும் பிரியாவிடை சமேத சோமநாதா் சுவாமியும் சிம்மம், கற்பக விருட்ச வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்தனா்.
திருவிழா தொடா்ந்து 11 நாள்கள் நடைபெறும். முக்கிய நிகழ்வுகளாக மே 8 -ஆம் தேதி திருக்கல்யாண உத்ஸவம், 9- ஆம் தேதி தேரோட்டம் நடைபெறும். 11- ஆம் தேதி சந்தனக்காப்பு உத்ஸவத்துடன் திருவிழா நிறைவு பெறும்.
திருவிழாவுக்கான ஏற்பாடுகளை மண்டபடிதாரா்கள், பக்தா்கள் செய்தனா்.