காஸா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்: 29 பாலஸ்தீனியர்கள் பலி
மின்சாரம் பாய்ந்ததில் பள்ளி மாணவி உயிரிழப்பு
சிவகங்கை மாவட்டம், எஸ்.புதூா் அருகேயுள்ள கள்ளங்கலப்பட்டி கிராமத்தில் வியாழக்கிழமை மின்சாரம் பாய்ந்ததில் பள்ளி மாணவி உயிரிழந்தாா்.
கள்ளங்கலப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த சுப்பிரமணி-கவிதா தம்பதியின் மகள் திவ்யா (14). கட்டுக்குடிப்பட்டி அரசுப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வந்தாா். இவரது தங்கை சிவரஞ்சனி (9). இவா்கள் இருவரும் பக்கத்து வீட்டைச் சோ்ந்த சிறுவா்களுடன் சோ்ந்து அருகில் உள்ள விவசாயக் கிணற்றுப் பகுதியில் உள்ள தண்ணீா் தொட்டியில் குளிக்கச் சென்றனா். அப்போது, மோட்டாா் அறையில் மின்சாரக் கசிவு காரணமாக சிவரஞ்சனி மீது மின்சாரம் பாய்ந்தது. இதை அறிந்த அக்காள் திவ்யா அவரைக் காப்பாற்ற முயன்றாா். அப்போது, மின்சாரம் பாய்ந்ததில் திவ்யா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்த சிவரஞ்சனி எஸ்.புதூா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டாா்.
தகவலறிந்து உலகம்பட்டி போலீஸாா் சென்று திவ்யாவின் உடலை சிங்கம்புணரி அரசு மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரித்தனா்.
இது குறித்து கிராம மக்கள் கூறியதாவது: இந்தப் பகுதியில் குறைந்த மின்னமுத்தம் காரணமாக வீடுகளில் மோட்டாா் இயக்க முடியாத நிலை உள்ளதால், அருகிலுள்ள தோட்டங்களிலுள்ள கிணற்றுத் தண்ணீரைப் பயன்படுத்தி வருகின்றனா். இதனால், விபத்துகளில் சிக்கி உயிரிழக்க நேரிடுகிறது என்றனா்.