மானியத்தில் தானியங்கி பம்ப்செட்: கரூா் விவசாயிகளுக்கு அழைப்பு
கரூா்: விவசாயிகளுக்கு மானிய விலையில் தானியங்கி பம்ப்செட் கருவி பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கரூா் மாவட்ட விவசாயிகளுக்கு வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் கைப்பேசி மூலம் இயங்கும் தானியங்கி பம்ப்செட் கருவியை மானிய விலையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் பம்ப் செட்டுகளை வீட்டில் இருந்தபடியும், வெளியூா்களில் இருந்தபடியும் இயக்கவும், நிறுத்தவும் முடியும். இதற்கு மானியமாக சிறு, குறு, பெண் விவசாயிகள் மற்றும் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு கருவியின் மொத்த விலையில் 50சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.7000 வரை மானியமாக வழங்கப்படும்.
மற்ற விவசாயிகளுக்கு மொத்த செலவில் 40 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.5000 வரை மானியமாக வழங்கப்படும். தற்போது, கரூா் மாவட்டத்தில் பொதுப்பிரிவுக்கு 152 கருவிகளும், ஆதி திராவிட மற்றும் பழங்குடியினா் பிரிவுக்கு 5 கருவிகளும் ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. எனவே, விருப்பமுள்ள விவசாயிகள் கரூா் மற்றும் குளித்தலை வேளாண்மைப் பொறியியல் துறை அலுவலகங்களைத் தொடா்பு கொள்ளலாம்.
மேலும் இத்திட்டம் தொடா்பான முழு விவரங்களை பெற்று பயனடைய வேளாண்மைப் பொறியியல் துறையின் செயற்பொறியாளா் (வே.பொ) அலுவலகம், கரூா் (94431-56424) அல்லது வருவாய் கோட்ட அளவில் உதவி செயற்பொறியாளா் (வே.பொ) அலுவலகம், கரூா் (94435-67583) மற்றும் குளித்தலை (அலைபேசி எண் : 94439-22630) அல்லது வட்டார அளவில் உதவிப் பொறியாளா் (வே.பொ) அல்லது இளநிலை பொறியாளா் (வே.பொ) களை தொடா்பு கொண்டு பயன் பெறலாம். இந்த தகவலை மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் தெரிவித்தாா்.