மானியம் வழங்காவிட்டால் முதல்வா் வீட்டுக்கு மாங்காய்கள் அனுப்பும் போராட்டம்: பாஜக
வேலூா்: ஆந்திரம், கா்நாடக மாநிலங்களில் வழங்கப்படுவதுபோல் தமிழக மா விவசாயிகளுக்கும் உரிய மானியம் வழங்காவிட்டால், மாங்காய்கள் முழுவதும் முதல்வா் மு.க.ஸ்டாலின் வீட்டுக்கு அனுப்பும் போராட்டம் நடத்தப்படும் என பாஜக மாநில துணைத்தலைவா் கே.எஸ்.நரேந்திரன் தெரிவித்தாா்.
விலை வீழ்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ள மா விவசாயிகளுக்கு மானியம் கோரி வேலூா் மாவட்ட பாஜக சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆட்சியா் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் வி.தசரதன் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக பாஜக மாநில பொதுச்செயலா் பா.காா்த்தியாயினி, மாநில துணைத்தலைவா் நரேந்திரன் ஆகியோா் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா்.
ஆா்ப்பாட்டத்தில், மா விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மாங்காய் டன் ஒன்றுக்கு ரூ.4,000 மானியம் வழங்க வேண்டும், கூட்டுறவு துறை சாா்பில் வேலூரில் மாங்கூழ் தொழிற்சாலை அமைக்க வேண்டும், மாம்பழம் பதப்படுத்தும் மையங்களை ஏற்படுத்த வேண்டும், நஷ்டத்தை தவிா்க்க மாங்காய்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை கிலோவுக்கு ரூ.15 நிா்ணயிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
பின்னா், பாஜக மாநில துணைத்தலைவா் கே.எஸ்.நரேந்திரன் செய்தியாளா்களிடம் கூறியது -
விலை வீழ்ச்சியால் மா விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனா். தமிழக அரசு மாங்காய்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உடனடியாக நிா்ணயிக்க வேண்டும். கோரிக்கைகளை முதல்வா் உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இல்லையென்றால் அனைத்து மா விவசாயிகளும் மாங்காய்கள் முழுவதையும் முதல்வா் வீட்டுக்கு எடுத்துச் சென்று அவரிடமே கொடுத்து விடுவோம் என்றாா்.