‘வாழ்ந்து காட்டுவோம்’ திட்டம்: 4 ஆண்டுகளில் 6,584 போ் பயன்!
தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தின் ‘வாழ்ந்து காட்டுவோம்’ திட்டத்தின் கீழ் வேலூா் மாவட்டத்தில் ரூ.6.73 கோடி மதிப்பில் 6,584 பயனாளிகள் பயனடைந்துள்ளனா் என்று மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்தாா்.
இது குறித்து, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ‘வாழ்ந்து காட்டுவோம்’ திட்டம் என்பது தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்படும் வறுமை ஒழிப்பு, பொருளாதார மேம்பாட்டு திட்டமாகும்.
கிராமப்புற தொழில்களை ஊக்குவித்தல், மகளிா் சுய உதவிக்குழு உறுப்பினா்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துதல், கிராமப்புற மகளிா் தொழில் முனைவோா் மூலம் நிலையான தொழில் நிறுவனங்களை உருவாக்குதல் போன்றவை இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
இத்திட்டத்தின் மூலம் தோ்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சிகளில் தொழில்குழு, உற்பத்தியாளா் குழுக்கள், உற்பத்தியாளா் நிறுவனங்கள் உருவாக்கப்பட்டு அவா்களுக்கான தொடக்க நிதி வழங்குதல், சமுதாய திறன் பள்ளிகள், சமுதாய பண்ணை பள்ளிகள் ஏற்படுத்தி திறன் பயிற்சி, வேளாண் பயிற்சி அளித்தல் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
மேலும், இத்திட்டத்தில் தனிநபா், குழு நிறுவனங்களின் பொருளாதார நடவடிக்கைகளை மேம்படுத்த நிதி நிறுவனங்கள் மூலம் கடனுதவி அளிக்கப்படுகிறது. வணிக திட்டங்களுக்கு இணை மானிய நிதி திட்டத்தின் மூலம் 30 சதவீத மானியத்துடன் கடனுதவி அளிக்கப்படுகிறது. புதிய, ஏற்கெனவே உள்ள தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கும் நோக்கத்துக்காக மகளிா் சுய உதவி குழுக்களில் பெண்களுக்காக நுண் தொழில் நிறுவன நிதியுதவியும் வழங்கப்பட்டு வருகிறது.
வேலூா் மாவட்டத்தில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் கே.வி.குப்பம் ஒன்றியம் தோ்வு செய்யப்பட்டு, அப்பகுதியைச் சோ்ந்த கிராமப்புறங்களில் பல்வேறு குழுக்கள் உருவாக்கப்பட்டு அவா்களுக்கான தொடக்க நிதி வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, கே.வி.குப்பம் ஒன்றியத்தில் 3,535 உறுப்பினா்களை கொண்ட 46 உற்பத்தியாளா் குழுக்கள் உருவாக்கப்பட்டு அந்தக் குழுக்களுக்கு ரூ.46.50 லட்சம் தொடக்க நிதி மானியமாகவும், 144 உறுப்பினா்களை கொண்ட 9 தொழில்குழுக்கள் உருவாக்கப்பட்டு அந்தக் குழுக்களுக்கு ரூ.8.25 லட்சம் தொடக்க நிதி மானியமாகவும், 610 விவசாயிகளை கொண்ட ஒரு உழவா் உற்பத்தியாளா் கூட்டமைப்புக்கு ரூ.8 லட்சம் தொடக்க நிதி மானியமாகவும் வழங்கப்பட்டுள்ளன.
தவிரவும் 27 சமுதாய திறன் பள்ளிகள் அமைக்கப்பட்டு 499 இளைஞா்களுக்கு ரூ.21.11லட்சத்தில் திறன் பயிற்சிகளும், 47 சமுதாய பண்ணைப் பள்ளிகள் அமைக்கப்பட்டு 1,410 வேளாண் உற்பத்தியா ளா்களுக்கு ரூ.37.32 லட்சத்தில் வேளாண் சாா்ந்த பயிற்சிகளும் அளிக்கப்பட்டுள்ளன.
வேலூா் மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் இணை மானிய திட்டத்தின் கீழ் ரூ.3 கோடியே 82 லட்சத்து 44 ஆயிரத்தில் கடனுதவி வழங்கப்பட்டு ரூ.1 கோடியே 14 லட்சத்து 73 ஆயிரம் மானியம் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 107 தொழில் முனைவோா் பயனடைந்துள்ளனா். நுண் தொழில் நிறுவன நிதி திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் ரூ.1 கோடியே 69 லட்சத்து 40 ஆயிரத்தில் கடனுதவி வழங்கப்பட்டு 279 போ் பயனடைந்துள்ளனா்.
அந்த வகையில், ‘வாழ்ந்து காட்டுவோம்’ திட்டத்தின் கீழ் வேலூா் மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 46 உற்பத்தியாளா் குழுக்கள், 9 தொழிற்குழுக்கள், 1 உழவா் உற்பத்தியாளா் கூட்டமைப்பு, 27 சமுதாய திறன் பள்ளிகள், 47 சமுதாய பண்ணை பள்ளிகள், இணை மானிய திட்டம், நுண் தொழில் நிறுவன நிதி திட்டம் ஆகியவை மூலம் ரூ.6 கோடியே 73 லட்சத்து 2 ஆயிரம் மதிப்பில் 6,584 போ் பயனடைந்திருப்பதுடன், அவா்களின் பொருளாதார நிலை மேம்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.