முதல் முறையாக TNPL கோப்பையை வென்ற திருப்பூர் - அஷ்வினின் திண்டுக்கல் அணியை வென்றது எப்படி?
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டின்என்பில் இறுதி போட்டி திண்டுக்கல் NPR கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. திண்டுக்கல் அணி சொந்த ஊரில் விளையாவதால் வெற்றி பெற வேண்டும் என்று முனைப்போடும், திருப்பூர் தமிழன்ஸ் அணி முதல் முறையாக இறுதி போட்டியில் நுழைந்த உற்சாகத்தோடும் மோதியது. தங்களுடைய முதல் கோப்பை கனவை நிறைவேற்றி விட வேண்டும் என்று முனைப்பிலும் இருந்ததால் இறுதி போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற ஒரு எதிர்பார்ப்பை உண்டாகி இருந்தது.

டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் துஷார் ரஹேஜா (77 ரன்கள், 46 பந்துகள்) மற்றும் அமித் சாத்விக் (65 ரன்கள், 34 பந்துகள்) ஆகியோரின் கூட்டணி திண்டுக்கல் அணியினரின் பந்துவீச்சை நலாபுறமும் பவுண்டரிக்கு அனுப்பியது.
220 ரன்கள் டார்கெட்
நிதானமாக நின்று ஆடிய இந்த கூட்டணி, அணிக்கு ஒரு நல்ல தொடக்கத்தை கொடுத்தனர். அடுத்து வந்த அனோவன்கர் வி 25 ரன்கள் (12 பந்துகள்) எடுத்தார். மூன்று பேரின் ஆட்டத்தாலே அணியின் மொத்த 200 ஐ தாண்டியது. 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 220 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது திருப்பூர் தமிழன்ஸ்.


திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் பந்துவீச்சில், எம் கார்த்திக் சரண் 4 ஓவர்களில் 44 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும், புவனேஸ்வர் வி 2 ஓவர்களில் 27 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டையும், வருண் சக்கரவர்த்தி 4 ஓவர்களில் 39 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

221 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய திண்டுக்கல் டிராகன்ஸ் அணி, ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக அதில் மாருதி விட்கர் 24 ரன்களும், ஹன்னி சைனி 17 ரன்களும், புவனேஸ்வர் 12 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர்.
இறுதியாக, 14.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 102 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது திண்டுக்கல் அணி. பீல்டீங்கின் போது காயமடைந்ததால், டிராகன்ஸ் அணியின் முக்கிய பேட்ஸ்மேன் சிவம் சிங் விளையாடாதது திண்டுக்கல் அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது.

ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணியின் பந்துவீச்சில், ஆர் சிலம்பரசன் 2 ஓவர்களில் 12 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும், எஸ் மோகன் பிரசாத் 2 ஓவர்களில் 18 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும், இசக்கிமுத்து 4 ஓவர்களில் 27 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அணிக்கு வெற்றியை தேடித்தந்தனர்.

தனது முதல் இறுதிப் போட்டியில் களமிறங்கிய திருப்பூர் தமிழன்ஸ், 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 220 ரன்கள் எடுத்ததன் மூலம், இந்த சீசனின் சிறந்த அணிக்கான மொத்த ஸ்கோரையும், TNPL இறுதிப் போட்டிகளில் அதிகபட்ச ஸ்கோரையும் பதிவு செய்தது.
இந்த வெற்றியின் மூலம் ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி TNPL கோப்பையை வென்று சாதனை படைத்தது.

துஷார் ரஹேஜா ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை வென்றார். டின்பில் தொடரின் வளர்ந்து வரும் பந்துவீச்சாளர் விருதை வென்ற இசக்கிமுத்து கூறும் போது "எங்கள் திட்டங்களைச் சரியாகச் செயல்படுத்தினோம் வெற்றியை எளிதாக பெற்றுள்ளோம். இன்னும் கடினமான பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்" என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
வெற்றி பெற்ற ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிக்கு 50 லட்சம் ரூபாயும், ரன்னர்-அப் அணியான திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு 30 லட்சம் ரூபாயும் ரொக்கப் பரிசாக வழங்கப்பட்டது.