தமிழகத்தின் நாளைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி: நயினார் நாகேந்திரன்
திருச்செந்தூர் முருகன் கோயிலில் மதியம் 2 மணி முதல் தரிசனம்!
திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் இன்று காலை குடமுழுக்கு வெகு விமரிசையாக நடைபெற்ற நிலையில், மதியம் 2 மணி முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகிறார்கள்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் இன்று காலை நடந்த குடமுழுக்கு விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். குடமுழுக்கு விழாவை முன்னிட்டு, நேற்று மதியம் முதல் கோயிலுக்குள் பக்தர்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்படவில்லை.
தொடர்ந்து, இன்று காலை குடமுழுக்கு நடைபெற்று முடிந்த நிலையில், தரிசனத்துக்கான காத்திருப்பு அறைக்குள் மதியம் 2 மணி முதல் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமரிசையாக நடந்த குடமுழுக்கு!
குடமுழுக்கையொட்டி கடந்த ஜூலை 1ம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கியது. தொடர்ந்து ஆறு நாள்கள் காலை மற்றும் மாலை வேளைகளில் யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.
ஏழாம் நாளான திங்கட்கிழமை திருக்கோயில் அதிகாலை நடைதிறக்கப்பட்டு பன்னிரெண்டாம் கால யாகசாலை பூஜைகளாகி காலை 6.22 மணிக்கு திருக்கோயில் ராஜகோபுரம், மூலவர் மற்றும் வள்ளி, தெய்வானை, சுவாமி சண்முகர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கும் விமான திருக்குட நன்னீராட்டு நடைபெற்றது. அப்போது ஓதுவார்கள் தமிழில் வேதங்கள் ஓதினர்.
குடமுழுக்கு விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடாதிபதி ஸ்ரீலஸ்ரீ விதுசேகர சுவாமிகள், திருக்கயிலாய பரம்பரை தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீ ல ஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், தமிழக ஏடிஜிபி டேவிட்சன் ஆசீர்வாதம், இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் ஸ்ரீதர், கூடுதல் ஆணையர்கள் பழனி, ஜெயராமன், மாவட்ட ஆட்சித் தலைவர் இளம்பகவத், திருக்கோயில் தக்கார் அருள்முருகன், இணை ஆணையர் ஞானசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பக்தர்கள் மீது ட்ரோன்கள் மூலம் புனித நீர் தெளிக்கப்பட்டது. பாதுகாப்பு பணியில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர்.