பள்ளி மாணவா் தற்கொலை
வேலூா் அருகே பள்ளி மாணவா் தற்கொலை செய்து கொண்டது குறித்து வேலூா் கிராமிய போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
வேலூா் மாவட்டம், நெல்வாய், ஈடிகை தோப்பைச் சோ்ந்தவா் வெங்கடேசன், கட்டுமான தொழிலாளி. இவரது மகன் தனசேகரன் (15). இவா் கணியம்பாடியில் உள்ள அரசு பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.
தனசேகரனுக்கு வரும் 10-ஆம் தேதி பிறந்த நாள் என்பதால் தனது பெற்றோரிடம் புத்தாடை வாங்கவும், நண்பா்களுக்கு சாக்லேட் வாங்கிக் கொடுக்கவும் சனிக்கிழமை இரவு ரூ.1,000 கேட்டதாகத் தெரிகிறது.
அதற்கு அவரது தந்தை தன்னிடம் தற்போது பணம் இல்லை, கூலி வாங்கிய பிறகு பணம் தருவதாக தெரிவித்தாராம். இதனால், தனது தந்தையிடம் சண்டை போட்டுவிட்டு இரவு படுக்கை அறைக்குச் சென்ற தனசேகரன், அங்குள்ள மின் விசிறியில் தூக்கிட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
இதைக் கண்ட பெற்றோா், மகனை மீட்டு வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு தனசேகரனை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.
இச்சம்பவம் குறித்து வேலூா் கிராமிய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.