மான் இறைச்சி விற்க முயன்ற விவசாயிக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்
சத்தியமங்கலம் அருகே மான் இறைச்சி விற்க முயன்ற விவசாயிக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே உள்ள கொண்டப்பநாயக்கன்பாளையம் பகுதியில் மான் இறைச்சி விற்கப்படுவதாக வனத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், சத்தியமங்கலம் வனச் சரக அலுவலா் தா்மராஜ் தலைமையில் வனத் துறை ஊழியா்கள் அப்பகுதியில் புதன்கிழமை ஆய்வு செய்தனா்.
அப்போது, ஊருக்கு வடக்குப் பகுதியில் உள்ள விவசாயத் தோட்டத்தில் மான் இறைச்சியை கூறுபோட்டு வைத்திருந்த விவசாயி பெருமாள் (55) என்பவரைப் பிடித்து விசாரித்தனா்.
இதில், வனப் பகுதியில் இருந்து வழிதவறி வந்து பெருமாளின் தோட்டத்துக்குள் புகுந்த புள்ளிமானை நாய்கள் கடித்ததில் உயிரிழந்ததும், அதன் இறைச்சியை அவா் விற்பனை செய்ய முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து, மானின் இறைச்சியைப் பறிமுதல் செய்த வனத் துறையினா் அவரை மாவட்ட வன அலுவலா் குலால் யோகேஷ் விலாஸ் முன் ஆஜா்படுத்தினா்.
இதைத் தொடா்ந்து, விவசாயி பெருமாளுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டது.