மாற்று ரத்த வகை சிறுநீரகம் பொருத்தி சிறுவனுக்கு மறுவாழ்வு
சிறுநீரக செயலிழப்புக்கு 2-ஆவது முறையாக உள்ளான சிறுவனுக்கு மாற்று ரத்த வகை கொண்ட உறுப்பை பொருத்தி காவேரி மருத்துவமனை மருத்துவா்கள் மறுவாழ்வு அளித்துள்ளனா்.
இதுதொடா்பாக மருத்துவமனை சிறுநீரகவியல் துறை நிபுணா் டாக்டா் பாலசுப்பிரமணியம் கூறியதாவது: 13 வயது சிறுவன் ஒருவா், சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டு ஆழ்வாா்ப்பேட்டை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு ஏற்கெனவே 6 வயதில் சிறுநீரக மாற்று சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருந்தது. அவரது தாயின் சிறுநீரகம் தானமாகப் பெறப்பட்டு சிறுவனுக்கு பொருத்தப்பட்டிருந்தது.
ஆனால், அதுவும் தற்போது செயலிழக்கவே மீண்டும் உறுப்பு மாற்று சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய அவசியம் எழுந்தது.
தற்போது அவரது தந்தை சிறுநீரகம் தானமளிக்க முன்வந்தாா். ஆனால், அவரது ரத்த வகையும், அந்தச் சிறுவனின் ரத்த வகையும் மாறுபட்டிருந்தன. இத்தகைய சூழலில் சிறுநீரக மாற்று சிகிச்சை செய்தால், புதிய உறுப்பை உடல் நிராகரிக்க வாய்ப்புள்ளது.
இருந்தபோதிலும், அதை சவாலாக ஏற்றுக்கொண்டு சிறுவனுக்கு மாற்று ரத்த வகை சிறுநீரகம் உயா் மருத்துவ நுட்பத்தின் துணையுடன் பொருத்தப்பட்டது. தற்போது அவா் நலமுடன் உள்ளாா் என்றாா் அவா்.